
சண்டிகர், ஏப்ரல் 8- பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை கிண்டல் செய்யும் வகையில் வீடியோ வெளியிட்டதாக ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது. இது குறித்த விமர்சனங்களுக்கு விமர்சனங்களுக்கு, ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஷ்டா பதிலடி கொடுத்துள்ளார். தேவையற்ற வெறுப்பை பரப்ப வேண்டாம் எனவும் அவர் கூறி உள்ளார். கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த ஐபிஎல், லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. பலத்த மழை காரணமாக இந்த ஆட்டம் பாதியில் ரத்து செய்யப்பட்டது. மழை குறுக்கிட்ட போது, கொல்கத்தா அணி 4 ஓவர்களில் 25 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இரவு 11:14 மணி வரை காத்திருந்தும் ஆட்டத்தை மீண்டும் தொடங்க முடியாததால், இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. போட்டி கைவிடப்பட்டதை அடுத்து, ஸ்ரேயாஸ் ஐயரின் சகோதரி ஸ்ரேஷ்டா சமூக வலைதளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில், “பஞ்சாபியர்களுக்கு எப்போதுமே பெரிய மனது, இந்தாருங்கள் ஒரு புள்ளியை வைத்துக்கொள்ளுங்கள்” என கொல்கத்தா அணியை கிண்டல் செய்வது போல் பேசியிருந்தார். இந்த வீடியோ பரவி, கொல்கத்தா அணி ரசிகர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அவருக்கு எதிராக பலரும் இணையத்தில் சரமாரியாக விமர்சனங்களை முன்வைத்தனர். இதையடுத்து தனது வீடியோ குறித்து ஸ்ரேஷ்டா தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எதற்காக இணையத்தில் இவ்வளவு வெறுப்பை பரப்புகிறார்கள் என எனக்குப் புரியவில்லை. இது வெறும் விளையாட்டு மட்டுமே. அந்த வீடியோ வெறும் வேடிக்கைக்காக மட்டுமே எடுக்கப்பட்டது. எனது சகோதரனுக்கு ஆதரவு தெரிவிக்கவே நான் வந்துள்ளேன். அதை நான் தொடர்ந்து செய்வேன் எனத் தெரிவித்துள்ளார்.





















