
சென்னை: ஏப்ரல் 8-
சிஏஏ, மூன்று வேளாண் சட்டங்கள் தொடங்கி வக்பு வாரிய சட்டத் திருத்தம் வரை மத்திய அரசு தாக்கல் செய்யும் பல்வேறு மசோதாக்கள் குறித்து இந்திய ஊடகங்களும், இந்தியாவின் சமூக – பொருளாதார – அரசியல் நகர்வுகளை அலசும் அயல்நாட்டு ஊடகங்களும் வரிந்து எழுதிய ஆதரவு, எதிர்ப்புக் கட்டுரைகள் எண்ணிலடங்காதவை எனலாம்.
அந்த வரிசையில் கடைசியாகச் சேர்ந்து கொண்டு, 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பரபரப்புக்கு இடையேயும் சலசலப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது, Foreign Contribution (Regulation) Amendment (FCRA) Bill எனப்படும் ‘வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா’.
இந்த மசோதா “ஒன்றிய அரசின் சர்வாதிகாரப் போக்கின்” உச்சம் என்று அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்க்கின்றனர்.
குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் கடுமையான கண்டனக் குரல்களைப் பதிவு செய்துள்ளனர்.
இந்தச் சட்ட மசோதவை உடனடியாகத் திரும்பப் பெறும்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் பினராயி. எதிர்ப்புகள் வலுக்க, நாடாளுமன்றத்தில் நடைபெற இருந்த இந்த மசோதா மீதான விவாதம் தள்ளிவைக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. FCRA எதிர்ப்பு ஏன்?வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதா, 2026-க்கு ஏன் இத்தகைய எதிர்ப்பு என்று பார்ப்போம்.இந்தியாவில், இப்போதைய நிலவரப்படி, பதிவு செய்யப்பட்ட 16,000 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.22,000 கோடி வெளிநாட்டுப் பங்களிப்பாக நிதி வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
நிலைமை இவ்வாறாக இருக்க, FCRA உரிமம் பெற்ற ஒரு தொண்டு நிறுவனத்தின் பதிவு ரத்தானாலோ, அது புதுப்பிக்கப் படவில்லை என்றாலோ, அல்லது உரிமத்தை சம்பந்தப்பட்ட தொண்டு நிறுவனமே சரண்டர் செய்தாலோ அதன் ஆளுகைக்கு உட்பட்ட சொத்துகள், வெளிநாட்டு நிதி ஆகியவை மத்திய அரசால் கையகப்படுத்தப்படலாம், நிர்வகிக்கப் படலாம் அல்லது தேவைப்படின் அரசு அதை விற்பனை செய்யலாம், என்கிறது வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்ட மசோதா, 2026.
இதன்மூலம், கிறிஸ்துவ சிறுபான்மை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்பைச் சந்திக்கும் என்கின்றனர் எதிர்ப்பாளர்கள்.




















