
புதுடெல்லி: ஏப்ரல் 8-
இந்தியா நிர்வகித்து வரும் சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படும் என்று ஈரான் தூதர் முகமது பத்தாலி தெரிவித்துள்ளார்.
ஈரான் நாட்டின் தென்முனையில் ஓமன் வளைகுடாவில் சபாகர் துறைமுகம் அமைந்துள்ளது. அந்த துறைமுகத்தை விரிவுபடுத்த கடந்த 2003-ம் ஆண்டில் இந்தியா, ஈரான் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2018 முதல் சபாகர் துறைமுகத்தை இந்தியா நிர்வகித்து வருகிறது. அங்கிருந்து பெர்சிய வளைகுடா நாடுகள், ஆப்கானிஸ்தான், மத்திய ஆசிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்திய சரக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
பல்வேறு காலக்கட்டங்களில் ஈரான் மீது அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால் இந்தியா உடனான நட்புறவு காரணமாக சபாகர் துறைமுகத்துக்கு மட்டும் அமெரிக்கா தொடர்ந்து விலக்கு அளித்து வருகிறது. இது ஈரானுக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது. பொருளாதார தடை அமலில் இருந்தாலும் சபாகர் துறைமுகம் வழியாக ஈரானுக்கு தேவையான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
கடந்த பிப்.28-ல் அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படை இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தது. கடந்த மார்ச் மாதத்தில் சபாகர் பகுதியில் உள்ள ராணுவ தளங்கள் மீது அமெரிக்கா, இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்தன. ஆனால் சபாகர் துறைமுகம் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படவில்லை. இதுகுறித்து இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது பத்தாலி கூறியதாவது: அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. இதனால் மேற்கு ஆசியா முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது. ஈரான் மீது பல்வேறு பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்த இக்கட்டான சூழலிலும் இந்தியா, ஈரான் இடையிலான பொருளாதார உறவு வலுவாக இருக்கிறது.
பரஸ்பர நன்மை, நம்பிக்கை அடிப்படையில் இரு நாடுகள் இடையே பொருளாதார ஒத்துழைப்பு தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இந்த பொருளாதார உறவு மேலும் வலுவடையும்.
போருக்குப் பிறகு சபாகர் துறைமுகம் மேலும் விரிவுபடுத்தப்படும். இரு நாடுகள் இடையிலான உறவில் சபாகர் துறைமுகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியா, ஈரான் மட்டுமன்றி இந்த பிராந்தியம் முழுவதற்கும் சபாகர் துறைமுகத்தில் இருந்து சரக்குகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.




















