
மும்பை, ஏப்ரல் 9- 2026 ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நடுவே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு புதிய கட்டுப்பாட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, போட்டியில் ஆடும் வீரர்கள் பட்டியலில் இடம்பெறாத மாற்று வீரர்கள் மைதானத்திற்குள் நுழையவும், பவுண்டரிக்கு வெளியே சுதந்திரமாக நடமாடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுவாக ஒவ்வொரு போட்டியின் துவக்கத்திலும் ஆடும் 11 வீரர்கள் மற்றும் 5 மாற்று வீரர்கள் என மொத்தம் 16 பேர் கொண்ட பட்டியலை அணிகள் நடுவர்களிடம் வழங்கும். தற்போது பிசிசிஐ அறிவித்துள்ள புதிய விதியின்படி, இந்த 16 பேரைத் தவிர்த்து, அணியில் உள்ள மற்ற கூடுதல் வீரர்கள் எந்த காரணத்திற்காகவும் மைதானத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. களத்தில் விளையாடும் வீரர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், பேட் வழங்குவது அல்லது பயிற்சியாளர்களின் முக்கிய தகவல்களை வீரர்களிடம் கொண்டு செல்வது போன்ற எந்தவொரு செயலுக்காகவும் இந்த கூடுதல் வீரர்கள் மைதானத்திற்குள் வரக்கூடாது என அனைத்து ஐபிஎல் அணிகளுக்கும் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதாவது, அணியால் சமர்ப்பிக்கப்பட்ட பட்டியலில் உள்ள அந்த குறிப்பிட்ட 5 மாற்று வீரர்கள் மட்டுமே குடிநீர் உள்ளிட்டவற்றை மைதானத்திற்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அணியின் மற்ற உபரி வீரர்கள் மைதானத்திற்கு வெளியே உள்ள தங்களது இருப்பிடங்களில் மட்டுமே அமர்ந்திருக்க வேண்டும். அவர்கள் பவுண்டரி எல்லைக்கும், மின்னணு விளம்பர பலகைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் அங்கும் இங்கும் நடமாடவோ, சுற்றித் திரியவோ கூடாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் போட்டி விளையாடும் விதிகளில் ஏற்கனவே உள்ள சில பிரிவுகளில் இந்த புதிய கட்டுப்பாடுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. குறிப்பாக விக்கெட் விழும் சமயத்திலோ அல்லது பவுண்டரி எல்லையிலோ மட்டுமே வீரர்களுக்கு நேர விரயம் ஏற்படாத வகையில் குடிநீர் வழங்க வேண்டும் எனவும், நடுவர்களின் முன் அனுமதி இல்லாமல் கூடுதல் குடிநீர் மைதானத்திற்குள் கொண்டு வரப்படக் கூடாது எனவும் விதிகளில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.





















