
புதுடெல்லி, ஏப்ரல் 10- ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 211 ரன்கள் இலக்குடன் பேட் செய்த டெல்லி அணிக்கு பிரசித் கிருஷ்ணா வீசிய கடைசி ஓவரில் வெற்றிக்கு 13 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது அதிரடி வீரர்களான விப்ராஜ் நிகாம், டேவிட் மில்லர் ஜோடி களத்தில் இருந்தது. விப்ராஜ் நிகாம் முதல் பந்தை பவுண்டரி விரட்டிய நிலையில் அடுத்த பந்தில் எக்ஸ்டிரா கவர் திசையில் ஷுப்மன் கில்லிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவ் 3-வது பந்தில் ஒரு ரன் எடுத்து டேவிட் மில்லரிடம் ஸ்ட்ரைக் வழங்கினார் 3 பந்துகளில் 8 ரன்கள் தேவை என்ற நிலையில் 4-வது பந்தை டேவிட் மில்லர் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். இதனால் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. வெளியே அமர்ந்திருந்த அந்த அணியின் வீரர்களும் உற்சாகமாக இருந்தனர்.
ஆனால் 5-வது பந்தை டீப் ஸ்கொயர் லெக் திசையில் அடித்த டேவிட் மில்லர் சிங்கிள் ரன் சேர்ப்பதற்கு ஓடவில்லை. இதுதான் டெல்லி அணியின் தலைவிதியை புரட்டிப்போட்டது. கடைசி பந்தில் 2 ரன்கள் தேவை என்ற நிலையில் பிரசித் கிருஷ்ணா புத்திசாலித்தனமாக வேகம் குறைந்த பவுன்சரை வீசினார். இதை சற்றும் எதிர்பாராத டேவிட் மில்லர் பந்தை தொட முடியாமல் தவறவிட்டார்.
அதற்குள் சிங்கிள் ரன் சேர்க்க குல்தீப் யாதவ் ஓடிவர விக்கெட் கீப்பர் ஜாஸ்பட்லர் விரைந்து செயல்பட்டு அவரை ரன் அவுட் ஆக்கினார்.
இந்த கடைசி பந்து அதிக உயரமாக வீசப்பட்டது என கூறி டெல்லி அணி தரப்பில் வைடு கேட்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆனால் 3-வது நடுவர் இதை ஆய்வு செய்து வைடு இல்லை என அறிவித்தார். முடிவில் டெல்லி அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 209 ரன்கள் என ஆட்டத்தை நிறைவு செய்து தோல்வி அடைந்தது.தொடர்ச்சியாக 2 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த டெல்லி அணிக்கு இது முதல் தோல்வியாக அமைந்தது.
அதேவேளையில் முதல் 2 ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த குஜராத் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. ஒருவேளை டேவிட் மில்லர் 5-வது பந்தில் ஒரு ரன் சேர்க்க ஓடியிருந்தால் போட்டி ‘டை’யில் முடிவடைந்து சூப்பர் ஓவருக்கு செல்ல வாய்ப்பு இருந்திருக்கும். இதனால் டேவிட் மில்லர் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.





















