
டெஹ்ரான்: ஏப்ரல் 10-
ஈரானும், அமெரிக்காவும் போர் நிறுத்தத்தை அறிவித்தபின், லெபனான் மீது இஸ்ரேல் நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை ஏவி 254 பேரை கொன்றது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியுள்ளது. இதனால் சண்டை நிறுத்தத்தில் குழப்பமான சூழல் நிலவுகிறது.
போர் காரணமாக மூடப்பட்ட ஹார்முஸ் ஜலசந்தியை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு திறக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விடுத்த கெடு கடந்த திங்கள் கிழமை முடிவடைந்தது. ஈரான் மீது மிகப் பெரிய தாக்குதலை அமெரிக்கா தொடங்க இருந்த நிலையில் கடைசி நேரத்தில் 2 வார கால சண்டை நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரான் ஒப்புக் கொண்டது. இரு நாடுகள் இடையே அமைதி பேச்சுவார்த்தையை ஏற்படுத்தும் நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியது.
இந்நிலையில் இஸ்ரேல் தனது தாக்குதலை லெபனான் நோக்கி திருப்பியது. பெய்ரூட் நகரில் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து நேற்று முன்தினம் 100 ஏவுகணைகளை வீசியது. இதில் 254 பேர் உயிரிழந்தனர். 890 பேர் காயம் அடைந்தனர். லெபனான் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டதால், இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.
இதைத் தொடர்ந்து ஈரானின் லவன் தீவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் வளைகுடா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் மூடியதாக கூறப்படுகிறது. இதனால் சண்டை நிறுத்தம் குறித்து குழப்பமான சூழல் நிலவுகிறது. ஈரான்- அமெரிக்கா சண்டை நிறுத்தத்துக்கும், லெபனான் மீதான தாக்குதலுக்கும் சம்பந்தம் இல்லை, அது தனிப்பட்ட சண்டை என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறினார். எந்த ஒப்பந்தமாக இருந்தாலும், அதில் லெபனானும் சேர்க்கப்பட வேண்டும் என ஈரான் வலியுறுத்தியது. இதனால் போரை தொடர்வதா, அமைதி பேச்சுவார்த்தைக்கு செல்வதா அல்லது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை கட்டுப்படுத்துவதா என்ற குழப்பத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளார். இஈரான் – அமெரிக்கா இடையே இஸ்லாமாபாத்தில் இன்று அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அழைப்பு விடுத்திருந்தார். இதை ஏற்று ஈரானிலிருந்து 10 பேர் கொண்ட குழு நேற்று பாகிஸ்தான் வந்தது. இதேபோல் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தனது குழுவினருடன் பாகிஸ்தான் வந்து இன்று பேச்சுவார்த்தையில் பங்கேற்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



















