
சென்னை: ஏப்ரல் 10-
ஒரு காலத்தில் பூரண மதுவிலக்கு பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த நிலையில், இந்தத் தேர்தலில் இலவச கவர்ச்சி வாக்குறுதிகளால் மங்கி போய் காணாமல் போகும் நிலையில் உள்ளது.
தமிழகத்தில் ஏற்படும் பெரும்பாலான சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களே காரணமாக உள்ளன. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக புள்ளி விவரங்களை காட்டும் திமுக அரசு, தெருவுக்கு தெரு, கிராமத்துக்கு கிராமம் எஃப்.எல்-2 எனப்படும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுக்கடைகளை தொடர்ந்து திறந்து வருகிறது.
பொதுவாக தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். இதில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியை தேர்தல் கதாநாயகன் என்றும், ‘சூப்பர் ஸ்டார்’ என்றும் பெருமிதமாக கூறிக்கொள்வதுண்டு. அதன்படி 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் ‘மதுவிலக்கு’ என்ற தலைப்பில், ‘திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று அறிவித்திருந்தது. மேலும், அந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து பூரணவிலக்கு” என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சூளுரைத்தார். ஆனால், அந்தத் தேர்தலில் ‘படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என தேர்தல் வாக்குறுதி அளித்த அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்பதற்குப் பதிலாக ‘படிப்படியாக மதுவிலக்கு’ என்றே இடம் பெற்றது. இதனால், தங்களது வாழ்நாட்களுக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை பார்த்துவிடலாம் என்ற எண்ணி காத்திருக்கும் காந்தியவாதிகள், பொதுநல தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடியை ஈட்டி தரக்கூடிய ஒரே நிலையான வருமானமான டாஸ்மாக் வருவாயை இழக்க பெரிய கட்சிகள் விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.



















