
தானே: ஏப்ரல் 10-
மேற்கு ஆசிய போருக்கு மத்தியில் 15,400 டன் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய வாயுவை (எல்பிஜி) ஏற்றி வந்த கப்பல் நவி மும்பை துறைமுகம் வந்தடைந்தது.
மேற்கு ஆசிய போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது. எனினும், மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, ஈரான் அரசு இந்தியாவுக்கு வர வேண்டிய கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு கப்பலை விடுவித்து வருகிறது. அந்த வகையில், இந்தியக் கப்பல் ஒன்று, ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்துக்கு (ஜேஎன்பிஏ) நேற்று வந்து சேர்ந்தது.
இது குறித்து ஜேஎன்பிஏ வெளியிட்ட அறிக்கையில், “ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து வந்த ‘கிரீன் ஆஷா’ என்ற இந்தியக் கொடி ஏந்திய எல்பிஜி கப்பலை ஜேஎன்பிஏ பெருமையுடன் வரவேற்றது. இக்கப்பல் பிபிசிஎல் – ஐஓசிஎல் நிறுவனங்களால் இயக்கப்படும் ஜேஎன்பிஏ-வின் திரவ சரக்கு தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.போர் தொடங்கிய பிறகு ஜேஎன்பிஏ-வை வந்தடையும் முதல் கப்பல் இது.
இக்கப்பல் 15,400 டன் எல்பிஜி-யைக் கொண்டு வந்துள்ளது கப்பல், அதன் சரக்கு மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். சிக்கலான புவிசார் அரசியல் சூழல்களுக்கு இடையிலும் கடல்சார் செயல்பாடுகள் இயங்கும் திறனை இந்த வருகை எடுத்துக் காட்டுகிறது. அதேவேளையில் நாட்டுக்கு அத்தியாவசியமான எல்பிஜி விநியோகத்தை இது உறுதி செய்கிறது” என கூறப்பட்டுள்ளது.
இது, கன்டெய்னர் மற்றும் திரவ சரக்குகளைக் கையாளும் முக்கிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது நாட்டின் எரிசக்தி விநியோகச் சங்கிலியில் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


















