
சென்னை, ஏப்ரல் 11- ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோதுகிறது. தொடக்க வீரர்களான சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் நெருக்கடியுடன் களமிறங்குகின்றனர்.ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி நடப்பு தொடரில் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது.
தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியிடம் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்திலும், கடைசியாக நடப்பு சாம்பியனான ஆர்சிபியிடம் 43 ரன்கள் வித்தியாசத்திலும் சிஎஸ்கே அணி தோல்வி கண்டிருந்தது. இந்த3 ஆட்டங்களையும் சிஎஸ்கே வெவ்வேறு மைதானங்களில் (குவாஹாட்டி, சேப்பாக்கம், எம்.சின்னசாமி) விளையாடி இருந்தது. இந்த சீசனை உற்சாகமற்ற தொடக்கத்துடன் ஆரம்பித்துள்ள சிஎஸ்கே வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமென்றால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காண வேண்டியது அவசியம். தென் ஆப்பிரிக்காவின் டெவால்ட் பிரெவிஸ் இல்லாததும் அணியின் சமநிலையைப் வெகுவாக பாதித்துள்ளது. அதிரடி வீரரான பிரெவிஸ் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் களமிறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், கணுக்கால் தசைப்பிடிப்பு காரணமாக இந்த சீசனில் இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடாத எம்.எஸ். தோனி எப்போது திரும்புவார் என்பது இன்னும் தெளிவு படுத்தப்படவில்லை. பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், ருதுராஜ் கெய்க்வாட் ஜோடி வலுவான தொடக்கத்தை அளிப்பது அவசியம். நடப்பு தொடரில் இவர்களிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான ஆட்டம் வெளிப்படவில்லை. சஞ்சு சாம்சன் 6,7,9 ரன்களில் நடையை கட்டியிருந்தார். அதேவேளையில் ருதுராஜ் கெய்க்வாட் 6,28,7 ரன்கள் சேர்த்திருந்தார். இந்த ஜோடி முதல் 6 ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் அதிரடியாக ரன் சேர்த்தால் மட்டுமே, அடுத்து வரும் ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே போன்றவர்கள் பயமின்றி விளையாட முடியும். ஜடேஜாவுக்கு பதிலாக அணிக்குள் வந்திருக்கும் சாம்சன், அதிரடி ஆட்டத்தின் வாயிலாக மட்டுமே தனது டிரேடிங்கை நியாயப்படுத்த முடியும். கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றொரு தோல்வியை சந்தித்தால் அவர் மீது கூடுதல் அழுத்தம் உருவாகக்கூடும். இதனால் அவர், கூடுதல் பொறுப்புடன் விளையாடக்கூடும்.





















