
கொல்கத்தா, ஏப்ரல் 11- மேற்கு வங்கம் கொல்கத்தாவில் நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். அப்போது, ஆம் ஜனதா உன்னயன் கட்சித் தலைவர் (ஏஜேயுபி) ஹுமாயூன் கபீருடன் பாஜக மறைமுகக் கூட்டணி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறதே என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: பாஜ கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் வேறு, ஆம் ஜனதா உன்னயன் கட்சியின் கொள்கைகள், சித்தாந்தங்கள் வேறு. மேற்கு வங்கத்தில் பாபர் மசூதியைக் கட்டுவேன் என்று கூறி பிரபலமானவர் ஹுமாயூன் கபீர். நாங்கள் மேற்கு வங்கத்தில் 20 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியாக வேண்டுமானாலும் அமர்வோம். ஹுமாயூன் கபீர் போன்றவர்களுடன் கூட்டணி வைக்க மாட்டோம். ஹுமாயூன் கபீரும், பாஜகவும் தென் துருவம், வடதுருவம் போன்றது. எப்போதுமே ஒன்று சேர்ந்து கூட்டணி வைக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார். திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜியை தேர்தலில் தோற்கடிக்க, பாஜக தலைவர்கள் ஹுமாயூன் கபீருடன் மறைமுகக் கூட்டணி வைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை தற்போது அமித் ஷா மறுத்துள்ளார்.


















