
புதுடெல்லி: ஏப்ரல் 11-
மேற்கு வங்கத்தில் அயோத்தி பாபர் மசூதியை போன்று புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டியதை தொடர்ந்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டவர் ஹுமாயூன் கபீர்.
முர்ஷிதாபாத் மாவட்டம், பரத்பூர் எம்எல்ஏவான இவர், ஆம் ஜனதா உன்னயன் கட்சி (ஏஜேயுபி) என்ற புதிய கட்சியை தொடங்கினார். மேற்கு வங்க தேர்தலையொட்டி இக்கட்சியுடன் ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி கூட்டணி வைத்தார். இந்நிலையில் சமூக வலைதளங்களில் வைரலாகும் ஒரு ‘ஸ்டிங் ஆபரேஷன்’ தேர்தல் அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஒரு ரகசிய பதிவில், மேற்கு வங்கத்தில் முஸ்லிம் வாக்குகளை திசை திருப்ப பாஜகவிடம் ஹுமாயூன் கபீர் ரூ.1,000 கோடி பேரம் பேசி, ரூ.200 கோடி முன்பணம் பெறுவது போன்ற காட்சிகள் தெரிகிறது.இதையடுத்து, ஹுமாயூன் கபீருடன் தனது கூட்டணியை முறித்துக் கொள்வதாக ஒவைசி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ஏஐஎம்ஐஎம் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஹுமாயூன் கபீர் தொடர்பான ரகசியப் பதிவின் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளன.
இது, மேற்கு வங்க முஸ்லிம்களை அரசியல்ரீதியாகப் பாதிப்புக்குள்ளாக்குவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம் மற்றும் நலன்களை கேள்விக்குள்ளாக்கும் எந்தவொரு கருத்துடனோ அல்லது நடவடிக்கையுடனோ எங்களால் இணைத்துக்கொள்ள இயலாது. எனவே மேற்கு வங்க தேர்தலில் தனித்து போட்டியிடுவோம்’’ என்று குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் தன் மீதான புகாரை ஹுமாயூன் கபீர் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘‘இந்த ஸ்டிங் வீடியோ போலியானது. செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டது. எனக்கு எதிராக திரிணமூல் கட்சியினர் தீட்டிய அரசியல் சதி இது. நான் எந்தக் கட்சியிடமிருந்தும் பணம் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை’’ என மறுத்துள்ளார்.
இதுகுறித்து மாநில அமைச்சர் பிர்ஹாத் ஹக்கீம் கூறுகையில், ‘‘கபீர் முஸ்லிம்களை பாஜக-விடம் விற்றுவிட்டார். மால்டா, முர்ஷிதாபாத் போன்ற மாவட்டங்களில் முஸ்லிம் வாக்காளர்களை பிளவுபடுத்த பாஜக முயற்சிக்கிறது. இந்து, முஸ்லிம் மற்றும் மத்துவா சமூகங்களை திசைதிருப்பும் நோக்கில், பி, சி என 2 அணிகளை பாஜக உருவாக்கியுள்ளது. அந்த வீடியோவில் பிரதமர் அலுவலகத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஏன் விசாரணை நடத்தப்படவில்லை.அமலாக்கத்துறை இவ்விஷயத்தில் மவுனம் சாதிப்பது ஏன்?” என கேள்வி எழுப்பி உள்ளார்.


















