Home செய்திகள் உலக செய்திகள் ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்

ஈரான் மீது கடும் பொருளாதாரத் தடைகளை விதிக்க அமெரிக்கா திட்டம்

வாஷிங்டன், ஏப்ரல் 13- அமெரிக்கா – ஈரான் இடையே பாகிஸ்தானில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ளது. 21 மணி நேர ஆலோசனையில் இருதரப்பு இடையே எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. கடந்த பிப்.28-ம் தேதி முதல் அமெரிக்கா – ஈரான் இடையே போர் நடைபெற்று வந்தது. கடந்த 8-ம் தேதி இரு தரப்பும் இணைந்து 2 வாரங்களுக்கு தற்காலிக போர்நிறுத்தத்தை அமல் செய்தன. இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நேற்று முன்தினம் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது.அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தலைமையிலான உயர் நிலைக் குழுக்கள் பல்வேறு கட்டங்களாக 21 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதைத் தொடர்ந்து அமெரிக்கா, ஈரான் குழுவினர் நேற்று நாடு திரும்பினர். முன்னதாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியதாவது: ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இது ஈரானுக்கு மோசமான செய்தி ஆகும். அணு ஆயுத திட்டத்தை கைவிட ஈரானிடம் வலியுறுத்தினோம். இதற்கு ஈரான் தரப்பு எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. அணு ஆயுத திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும் என்பதே எங்களது பிரதான நோக்கம். எங்கள் நிலைப்பாடு மற்றும் முடிவை தெளிவாக கூறிவிட்டோம். இனிமேல் ஈரான் தரப்பே இறுதி முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு வான்ஸ் கூறினார். ஹார்முஸ் ஜலசந்தி குறித்து அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பது குறித்தும் அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை. அமெரிக்க துணை அதிபர் வான்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்திய ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘எங்களது கோட்பாடுகளை அமெரிக்க அரசிடம் எடுத்துரைத்து உள்ளோம். ஈரானின் நம்பிக்கையை பெறுவது அமெரிக்காவின் கையில் உள்ளது.