
கொழும்பு, ஏப்ரல் 13- இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மதீஷா பதிரனா, விரைவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினருடன் (கேகேஆர்) இணையவுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் கேகேஆர் அணிக்காக ரூ.18 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் மதீஷா பதிரனா. இந்நிலையில், அவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் (எஸ்எல்சி) ஆட்சேபம் இல்லாத சான்றிதழை (என்ஓசி) வழங்கவேண்டிய நிலை இருந்தது. இந்நிலையில் என்ஓசி வழங்குவதற்கான கட்டாய உடற்தகுதிச் சோதனையில் பதிரனா வெற்றி பெற்றுள்ளார். இதைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அவருக்கு என்ஓசி-யை வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் கேகேஆர் அணியினருடன் விரைவில் இணைவார் என்று கொல்கத்தா அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. சென்னையில் நாளை (ஏப்ரல் 14) நடைபெறவுள்ள சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்குவது கடினமே. அநேகமாக அவர் வரும் 17-ம் தேதி அணியினருடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுவதாக கேகேஆர் அணி வட்டாரங்கள் தெரிவித்தன.





















