
புதுடெல்லி: ஏப்ரல் 17-
தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்கள் மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டன. இந்த மசோதாக்கள் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டில் மகளிர் இடஒதுக்கீடு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும். மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மக்களவையில் தற்போதுள்ள 543 இடங்களை, 850 ஆக அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று தொடங்கியது. முதல் நாளில் மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்துவதற்காக அரசியல் சாசன திருத்தம் (131-வது திருத்தம்) மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026 ஆகியவற்றை மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் மக்களவையில் அறிமுகம் செய்தார். இதேபோல யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த ) மசோதா 2026-ஐ உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் அறிமுகம் செய்தார்.
இந்த 3 மசோதாக்களுக்கும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட இண்டியா கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இவை தொடர்பாக ஆளும் கூட்டணி, எதிர்க்கட்சிகள் இடையே சுமார் 40 நிமிடங்கள் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மசோதாக்களை விவாதத்துக்கு ஏற்பதா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடந்தது. மசோதாக்களுக்கு ஆதரவாக 251 பேரும், எதிராக 185 பேரும் வாக்களித்தனர். பெரும்பான்மை வாக்குகளின் அடிப்படையில் 3 மசோதாக்களும் மக்களவையில் அதிகாரப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து 3 மசோதாக்கள் மீதான விவாதம் தொடங்கியது. மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் விவாதத்தை தொடங்கிவைத்தார். அவர் கூறியதாவது: மகளிருக்கான இடஒதுக்கீட்டை சட்ட மேதை அம்பேத்கர், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உள்ளிட்டோர் வலியுறுத்தினர். தற்போது நாடாளுமன்றம், சட்டப்பேரவையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க ஏதுவாக புதிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் அனைத்து மாநிலங்களிலும் 50 சதவீத எம்.பி. இடங்கள் அதிகரிக்கப்படும். 2029 மக்களவைத் தேர்தலின்போது பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமலாகும். இவ்வாறு அவர் பேசினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியதாவது: தமிழகத்தில் தற்போது 39 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த எண்ணிக்கை 59 ஆக உயரும். அதே போல, கேரளாவில் 20-ல் இருந்து 30 ஆகவும், ஆந்திராவில் 25-ல் இருந்து 38 ஆகவும், தெலங்கானாவில் 17-ல் இருந்து 26 ஆகவும், கர்நாடகாவில் 28-ல் இருந்து 42 ஆகவும் அதிகரிக்கும். கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா போன்றே தற்போதைய மசோதாவும் உள்ளது. எந்த மாற்றமும் செய்யவில்லை. ஒரு புள்ளிகூட கூடுதலாக சேர்க்கப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.


















