
வாஷிங்டன்: ஏப்ரல் 17-
அமெரிக்க மத்திய கட்டளைத் தலைமையகம் (CENTCOM) தற்போது ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் 12 கப்பல்கள், 100 விமானங்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட படையினரை பயன்படுத்தி வர்த்தக தடை நடவடிக்கையை செயல்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது.
இந்த தடை நடவடிக்கை தொடங்கியதில் இருந்து ஈரான் துறைமுகத்தில் இருந்து சுமார் 14 கப்பல்கள் தங்களது பாதையை மாற்றி, அமெரிக்க கடற்படையின் தடைக்கு இணங்கி திரும்பிச் சென்றுள்ளன. இந்த நடவடிக்கை மூலம் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் அல்லது அங்கிருந்து வரும் கப்பல்களை இரவு பகலாக கண்காணித்து முழுமையாக கட்டுப்படுத்த அமெரிக்கா தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
முன்பு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஹார்முஸ் வழித்தடத்தை முழுமையாக தடை செய்வதாகக் கூறியிருந்த நிலையில், அமெரிக்க ஜெனரல் டான் கெயின் இப்போது தெளிவுபடுத்தியுள்ளார். அமெரிக்க ராணுவம் ஹார்முஸ் வழித்தடத்தை தடை செய்யவில்லை என்றும், ஈரான் துறைமுகங்கள் மற்றும் அதன் கடற்கரைப் பகுதிகளுக்கு மட்டுமே கடற்படை கொண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் விளக்கினார். இதனால் ஈரான் துறைமுகத்தில் இருக்கும் சீனா கப்பல், இந்திய கப்பல் என எவ்விதமான வித்தியாசமும் இல்லாமல் அனைத்து கப்பல்களையும் அமெரிக்க முடக்கி வருகிறது. இதன் காரணமாக ஈரானின் வர்த்தகம் முடங்கியது மட்டும் அல்லாமல் ஈரானுக்கான நிதி ஆதாரமும் முடங்கியுள்ளது.
இதைவிட முக்கியமாக அமெரிக்காவின் இந்த பிளாக்கேட் தொடர்ந்தால், ஈரானில் உணவு தட்டுப்பாடு மிகப்பெரியதாக வெடிக்கும் நிலை உருவாகும். ஈரான் மற்ற வளைகுடா நாடுகளை போல் தனது உணவு தேவையில் சுமார் 30-40 சதவீதம் இறக்குமதி பொருட்களை மட்டுமே நம்பியுள்ளது. இப்படியிருக்கையில் அமெரிக்க கடற்படை 12 கப்பல்கள், 100 விமானங்கள் மற்றும் 10,000க்கும் மேற்பட்ட படையினரை பயன்படுத்தி ஈரானுக்கான் இன் – அவுட் என இரு தரப்பு வர்த்தகத்தையும் முடக்கியுள்ளது மூலம் பெரும் நெருக்கடி உருவாகும் நிலை உள்ளது.
ஒருப்பக்கம் ராணுவ நடவடிக்கைகளுக்கு இணையாக இராஜதந்திர முயற்சிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வியாழக்கிழமை அறிவித்துள்ளபடி, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைந்து வருகிறது.
சுமார் ஏழு வாரங்களாக நீடித்து வந்த போரை முடிவுக்கு கொண்டு வர இரண்டாவது சந்திப்பை ஏற்பாடு செய்யும் முயற்சியில் இரு தரப்பும் ஈடுபட்டுள்ளன. ஏப்ரல் 8 அன்று அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தம் இப்போது காலாவதியாகும் நிலையில் உள்ளது. இருப்பினும் அடுத்த சந்திப்புக்கான தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை. பாகிஸ்தான் இந்த அமைதி பேச்சுவார்த்தை முயற்சியை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதேவேளையில் நேற்று செய்தியாளர்களிடம் டிரம்ப் பேசுகையில் இந்த வார இறுதியில் பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு உள்ளதாக சிக்னல் கொடுத்தார்.
ஆனால் தற்போது அமெரிக்க கடற்படை பலமாக இப்பகுதியில் இருக்கும் வேளையில் எப்படி ஈரான் ஹார்முஸ்-ஐ திரும்ப பெறும் என்பது அடுத்த கேள்வி. இது அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தைகளில் முக்கிய இடம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலைமை மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ராணுவ ரீதியான தாக்குதல்கள் நடக்கவும் வாய்ப்புள்ளது.


















