
விருதுநகர்: ஏப்ரல் 20
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மீட்புப் பணி நடந்தபோது ஆலையின் இன்னொரு அறை வெடித்துச் சிதறியதில் போலீஸார், தீயணைப்பு வீரர்கள் உட்பட மொத்தம் 19 பேர் காயமடைந்தனர்.விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் கோவிந்த நல்லூரைச் சேர்ந்த முத்துமாணிக்கம் என்பவருக்குச் சொந்தமான ‘வனஜா’ என்ற பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் நேற்று 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றிக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு அறையில் சோல்சா வெடி தயாரிக்கும் பணியின்போது உராய்வு காரணமாக திடீரென பட்டாசு மருந்துகள் வெடித்துச் சிதறின. இதனால் ஏற்பட்ட தீ அடுத்தடுத்த அறைகளுக்கும் பரவியது.இந்த விபத்தில் சேர்வைக்காரன்பட்டியைச் சேர்ந்த பேச்சியம்மாள் (51), சாரதா (40), வீரபத்திரன் (45), இவரது மனைவி சங்கிலித் தங்கம் (40), திருத்தங்கல்லைச் சேர்ந்த பஞ்சவர்ணம் (56), கோவிந்தநல்லூரைச் சேர்ந்த அருண்குமார் (23), ஆதிப்பட்டியைச் சேர்ந்த வாழவந்தான் மகன் கதிஷ் (14) ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் 7 பேரும் மீட்கப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கட்டிட இடிபாடுகளில் சிக்கியும், உடல் கருகிய நிலையிலும் 23 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்து, போலீஸார், தீயணைப்பு வீரர்கள், ஜேசிபிவாகனங்களின் உதவியோடு இடிபாடுகளை அகற்றி மீட்புப் பணிகளை மேற்கொண்டிருந்தனர்.இரவு சுமார் 7.45 மணி அளவில் பட்டாசு ஆலையின் இன்னொரு அறை திடீரென வெடித்துச் சிதறியது.இதில், விருதுநகர் கோட்ட உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன், 3 போலீஸார், 2 பெண்போலீஸார், ஜேசிபி இயந்திரத்துடன் வந்தவர்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அவர்கள் விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.சம்பவ இடத்தில் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா, எஸ்.பி. ஸ்ரீநாதா ஆகியோர் விசாரணை நடத்தினர்.விபத்து குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள ஆலை உரிமையாளரை தேடி வருகின்றனர். தகவல் அறிந்து அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, விருதுநகர் தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் ஆகியோர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று, உயிரிழந்தோரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.


















