
புதுடெல்லி: ஏப்ரல் 24
ஈரான் போர் உலக அளவில் பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் விலைகளை பல மடங்கு உயர்த்தி இருக்கிறது. பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காரணமாக இருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை பெட்ரோல், டீசல் விநியோகத்தில் எந்த ஒரு சிக்கலும் இதுவரை ஏற்படவில்லை. எல்பிஜி விநியோகத்தில் மட்டும் தொடக்கத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டது
அதுவும் அரசு தற்போது சரி செய்து விட்டது. இந்த சூழலில் ஈரான் போர் இந்திய மக்களுக்கு மூன்று முக்கியமான பிரச்சனைகளைத் தரும் என ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியரும் சர்வதேச நாணய நிதியத்தின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனருமான கீதா கோபிநாத் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இந்தியாவிற்கு உணவு , எரிபொருள் மற்றும் உரம் தொடர்பான பெரிய பிரச்சினை ஏற்படும் எனக் கூறியிருக்கிறார். இது நேரடியாகவே மக்களை பாதிக்கும் என்கிறார்.இந்த மோதல் விரைவில் தணிந்தால் அதன் உடனடி தாக்கம் குறைவாகவே இருக்கும் ஆனால் அப்படி நடக்காத பட்சத்தில் அதன் தாக்கத்தை இந்தியா அதிக அளவு எதிர்கொள்ளும் எனக் கூறுகிறார். தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி உலகிற்கான மிகப்பெரிய எண்ணெய் நெருக்கடி என்றும் 1970களில் இந்த உலகம் கண்டதை விட மிகப்பெரியது என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.


















