Home மாவட்டங்கள் பெங்களூர் வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக பைக் ஏற்றி பெண்ணை கொன்ற கும்பல் கைது

வீட்டில் கொள்ளை அடிப்பதற்காக பைக் ஏற்றி பெண்ணை கொன்ற கும்பல் கைது

பெங்களூரு: மே 8-
பண ஆசைக்காகத் தனியாக வசித்து வந்த பெண் ஒருவரைத் திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிக் கொலை செய்த சினிமா பாணியிலான அதிர்ச்சித் தகவல் நகரில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி குருபரஹள்ளியின் பைப்லைன் சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம், ஆரம்பத்தில் ஒரு சாதாரண ‘விபத்து’ என்றே கருதப்பட்டது. ஆனால் மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், இது கொள்ளையடிப்பதற்காக நடத்தப்பட்ட திட்டமிட்ட கொலை என்பது உறுதியானது. இந்த வழக்கில் ராகேஷ், மஞ்சுநாத், சேத்தன், பிரதீப் மற்றும் யோஹான் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவனான சேத்தன் என்பவருக்குப் பாதிக்கப்பட்ட விஜயலட்சுமி என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. அவரிடம் கடன் வாங்கியிருந்த சேத்தன், அவரிடம் அதிகப் பணம் மற்றும் நகைகள் இருப்பதை அறிந்து, தனது நண்பர்களுடன் சேர்ந்து கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியுள்ளான்.
அதன்படி, ஏப்ரல் 21 அன்று விஜயலட்சுமி சாலையில் நடந்து சென்றபோது, ராகேஷ் என்பவன் தனது பைக்கால் அவர் மீது பலமாக மோதியுள்ளான். உடனே அங்கு ஆட்டோவில் வந்த மற்ற கூட்டாளிகள், அவரை மருத்துவமனையில் சேர்ப்பது போல நாடகமாடியுள்ளனர்
பெண்ணை மருத்துவமனையில் அனுமதிக்கும் சாக்கில், மஞ்சுநாத் என்ற நபர் விஜயலட்சுமியின் பையிலிருந்த வீட்டுச் சாவியைத் திருடிக்கொண்டு நேராக அவர் வீட்டிற்குச் சென்று கொள்ளையடிக்க முயன்றுள்ளார். அப்போது அக்கம்பக்கத்தினர் கேள்வி எழுப்பவே, ‘ஆதார் கார்டு எடுக்க வந்தேன்’ என்று பொய் சொல்லித் தப்பியோடியுள்ளார். இதற்கிடையில், ராகேஷ் போக்குவரத்து காவல் நிலையத்திற்குச் சென்று, “தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தேன்” எனப் பொய்ப் புகார் அளித்துத் தன்னை ஒரு நல்லவன் போலக் காட்டிக்கொண்டான்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணின் வீட்டில் மர்ம நபர்கள் நுழைய முயன்றது குறித்து வீட்டு உரிமையாளர் புகார் அளித்தார். மகாலட்சுமி லேஅவுட் போலீஸார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இது விபத்து அல்ல, திட்டமிட்ட சதி என்பது அம்பலமானது. துரதிர்ஷ்டவசமாகச் சிகிச்சை பலனின்றி விஜயலட்சுமி உயிரிழந்தார்.
இந்த வழக்கில் மற்றொரு திருப்பமாக, கைதானவர்களில் ஒருவனான மஞ்சுநாத், போலீஸ் காவலில் இருந்தபோதே உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். போலீஸார் கொலை மற்றும் கொள்ளை முயற்சி வழக்குகளைப் பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.