
குடகு: மே 8-
கர்நாடக மாநிலம் மடிகேரி அருகே பேருந்து ஓட்டுநர் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையிலும், சமயோசிதமாகச் செயல்பட்டு பேருந்தை நிறுத்தி பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ள சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவிலிருந்து மடிகேரி நோக்கி இன்று அதிகாலை ஒரு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. மடிகேரி அருகே உள்ள தாளத்மனே என்ற பகுதிக்கு வந்தபோது, பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநருக்கு திடீரென கடுமையான மாரடைப்பு ஏற்பட்டுள்ளது.
சாமர்த்தியமான செயல்:
தனக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதை உணர்ந்த ஓட்டுநர், பேருந்து கட்டுப்பாட்டை இழந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். கடுமையான வலியிலும் போராட்டத்திற்கிடையே பேருந்தை சாலையோரப் பள்ளத்தில் விழாதவாறு சாதுர்யமாகச் செயல்பட்டு சாலையோர வடிகால் அருகே நிறுத்தியுள்ளார்.
பேருந்து ஓரத்தில் சற்றே சாய்ந்த போதிலும், ஓட்டுநரின் இந்த உடனடி முடிவால் பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பினர். மயக்கமடைந்த ஓட்டுநரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மீட்டு மடிகேரியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
தன்னலமற்ற முறையில் பயணிகளின் உயிரைக் காத்த ஓட்டுநரின் செயலை அப்பகுதி மக்களும் பயணிகளும் பாராட்டி வருகின்றனர்.


















