
மாஸ்கோ: மே 12 –
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு திடீரென்று பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பது உலகளவில் பேசும் பொருளாகி உள்ளது. ரஷ்யாவில் புதினுக்கு எதிராக புரட்சி ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது தான் இந்த பாதுகாப்பு அதிகரிப்புக்கு முக்கிய காரணம் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதோடு புதினின் சமையல்காரர்கள் முதல் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் பதவி வகித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டு இப்போது வரை விளாடிமிர் புதின் தொடர்ந்து பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். ரஷ்யா, தற்போது உக்ரைன் மீது போர் புரிந்து வருகிறது. கடந்த 2022ம் ஆண்டு தொடங்கிய இந்த போர் இன்னும் முடியவில்லை. உக்ரைனும், ரஷ்யாவும் பயங்கரமாக மோதி வருகின்றன. பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தற்போது 3 நாட்கள் மட்டுமே போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பிறகு மீண்டும் இருநாடுகள் இடையே மோதல் தொடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பலமடங்கு பாதுகாப்பு அதிகரிப்பு அதாவது தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பாதுகாப்பு திடீரென்று பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக புதினின் பாதுகாப்பில் ஈடுபடுவோரை விட ஏராளமானவர்கள் அந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல் சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், ”புதினின் தனிப்பட்ட உதவியாளர்கள், சமையல்காரர்கள் முதல் பாதுகாவலர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக புதினுடன் நெருக்கமாக செயல்படும் ஊழியர்களின் வீடுகளிலும் ரகசிய கண்காணிப்பு அமைப்புகள் வைக்கப்பட்டுள்ளது.
புதினுக்கு உணவு சமைக்கும் சமையல்காரர்கள், பாதுகாவலர்கள், போட்டோகிராபர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதினை சந்திக்க வருபவர்கள் ஏற்கனவே பலகட்ட சோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையில் தற்போது கூடுதலாக இருமுறை சோதிக்கப்படுகின்றனர். அதேபோல் புதினுடன் நெருக்கமாக பணியாற்றுபவர்கள் இணைய வசதி இல்லாத செல்போன்களை மட்டுமே பயன்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.


















