
பெய்ஜிங்: மே 16 –
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீன பயணத்தை நிறைவு செய்து பெய்ஜிங்கில் இருந்து நேற்று வாஷிங்டன் சென்றார். சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இருதரப்பு வர்த்தகம், வரி விதிப்பு, தைவான், ஈரான் விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஈரானிடம் உள்ள யுரேனியத்தை கைப்பற்ற வேண்டும். ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும். ஈரான் போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பது அதிபர் ட்ரம்பின் பிரதான நோக்கங்களாக உள்ளன. இதுதொடர்பாக சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் அவர் விரிவான பேச்சுவார்த்தை நடத்தினார்.ஈரானின் 90 சதவீத கச்சா எண்ணெய்யை சீனா வாங்குகிறது.
ஈரானுக்கு தேவையான ஆயுதங்கள், உணவு தானியங்களை சீனாவே விநியோகித்து வருகிறது. எனவே சீனாவின் நிர்பந்தம் மூலம் ஈரான் போருக்கு தீர்வு காண முடியும் என்று ட்ரம்ப் திட்டமிட்டு இருந்தார். இதுதொடர்பாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: சீனாவுக்கும் ஈரானுக்கும் மிக நெருங்கிய நட்புறவு நீடிக்கிறது. மூன்றாம் தரப்பு நாடுகளில் இருந்து ஈரானுக்கு தேவையான ஆயுதங்களை சீனா தொடர்ந்து விநியோகம் செய்து வருகிறது.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி தொடர்ந்து ஈரானின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும் என்று சீனா விரும்புகிறது. இந்த காரணங்களால் சீன அதிபர் ஜி ஜின்பிங் சாதகமான பதில் அளிக்கவில்லை. ஈரானில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த சமரச முயற்சிகளில் ஈடுபட மட்டுமே சீன அதிபர் உறுதி அளித்திருக்கிறார். சீன, அமெரிக்க அதிபர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்திருக்கிறது. இவ்வாறு சர்வதேச அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

















