
சென்னை: மே 16 –
24 மணி நேரமும் மதுபானங்களை விற்றவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ். சென்னை முழுக்க பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத பார்கள் நடத்தியது தொடர்பாக போலீசார் நேற்று சோதனை நடத்தினார்கள். இந்த வேட்டையில் 16 பேர் கைது செய்யப்பட்டனர். 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. நேற்று திருவெற்றியூரில் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், அடுத்தடுத்து அதிரடியான சம்பவங்கள் நடந்து வருகிறது.
கடந்த காலங்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் பல்வேறு பார்களில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதனை போலீசார் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. அதேபோல் சந்துக்கடைகள் என்ற பெயரில் சிலர் வீடுகளில் ரகசியமாக விற்றும் வந்தார்கள், பெட்டிகளை கூட சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்யும் இடமாகவும் ஒரு சில இடங்களில் இருந்தது. இவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு கோரிக்கைகள் பறந்தன. இதையடுத்து 24 மணி நேரமும் மதுபானங்களை விற்றவர்களை தேடி தேடி கைது செய்து வருகிறது தமிழ்நாடு போலீஸ்.
சென்னையை பொறுத்தவரை சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை கமிஷனர்களின் தலைமையில் சென்னை முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக பார்கள் நடத்தியதாகவும், மதுபாட்டில்களை பதுக்கி வைத்து சில்லரை விற்பனையில் ஈடுபட்டதாகவும் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது.

















