
திருவனந்தபுரம்: மே 16-
கேரளத்தில் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி 11வது நாளான நேற்று முன்தினம் முதல்வராக வி.டி. சதீசன் அறிவிக்கப்பட்டார்.இதனால் முதல்வர் பதவிக்கு சதீசனுடன் போட்டி போட்ட காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளரும், எம்பியுமான கே.சி. வேணுகோபால் மற்றும் மூத்த தலைவர் ரமேஷ் சென்னித்தலா ஆகியோர் கடும் ஏமாற்றமடைந்தனர். வேணுகோபாலுக்கு காங்கிரசில் உயர் பதவி தருவதாக கட்சி மேலிடம் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளார்.இந்திய சுற்றுலா
ஆனால் ரமேஷ் சென்னித்தலா இப்போதும் கடும் அதிருப்தியில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு வரை அவர் சதீசனுக்கு வாழ்த்து கூட சொல்லவில்லை. நேற்று குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தரிசனம் செய்த பின்னர் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியது: முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள சதீசனுக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் உறுதுணையாக
இருப்பார்கள். யார் அமைச்சராக வேண்டும் என்பது குறித்து முதல்வர் தான் தீர்மானிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ரமேஷ் சென்னித்தலா அமைச்சர் பதவியை ஏற்க மறுத்து வருவதால்
ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் அவருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். காங்கிரஸ் அகில இந்திய பொதுச் செயலாளர் தீபா தாஸ் முன்ஷி நேற்று ரமேஷ் சென்னித்தலாவின் வீட்டுக்கு சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, முக்கிய துறையை ஒதுக்கினால் மட்டுமே அமைச்சர் பதவியை ஏற்பேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பதவியேற்பு விழா வரும் 18ம் தேதி திருவனந்தபுரம் மத்திய ஸ்டேடியத்தில் வைத்து நடைபெறுகிறது.
இதில் முதல்வர் வி.டி. சதீசன் உள்பட 20 அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று கூறப்படுகிறது



















