
புதுடெல்லி, மே 22- ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), நெதர்லாந்து, சுவீடன், நார்வே, இத்தாலி ஆகிய 5 நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவு செய்துள்ளார். இந்தப் பயணத்தில் இந்தியாவின் பாரம்பரியம், வேளாண்மை, மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு பரிசுப் பொருட்களை உலகத் தலைவர்களுக்கு அவர் வழங்கினார். இத்தாலியின் ரோம் நகருக்கு சென்றபோது, அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு, பிரத்யேகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 2 பட்டு சால்வைகளை (முகா பட்டு சால்வை, ஷிருய் லில்லி பட்டு சால்வை) மோடி பரிசாக வழங்கினார். அசாமின் ‘தங்கப் பட்டு’ என்று அழைக்கப்படும் முகா பட்டு, பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கின் அரிய வகை கைத்தறி ஜவுளியாகும். செயற்கை சாயங்கள் ஏதுமின்றி, அதன் இயற்கையான தங்க நிறம், நீடித்து உழைக்கும் தன்மை, சூழலுக்கு பாதிப்பில்லா தயாரிப்பு ஆகியவற்றுக்காக இது மிகவும் மதிக்கப்படுகிறது. இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டரெல்லாவுக்கு, பாரம்பரிய பளிங்கு வேலைப்பாடு கொண்ட பெட்டியுடன் இந்திய இசை மேதைகளான பண்டிட் பீம்சென் ஜோஷி, எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோரின் இசை குறுந்தகடுகளையும் பிரதமர் மோடி பரிசாக வழங்கினார். ஐ.நா. சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் இயக்குநர் ஜெனரல் கியூ டோங்யுவிடம் இந்தியாவின் மிகச்சிறந்த தானியங்களின் தொகுப்பை பிரதமர் மோடி வழங்கினார். இதில் கேரளா வின் பாலக்காடு சிவப்பு அரிசி, மேற்கு வங்கத்தின் கோவிந்தோபோக் அரிசி, இந்தோ-கங்கை சமவெளியின் பாஸ்மதி அரிசி, அசாம் பிரம்மபுத்ரா பள்ளத்தாக்கின் ஜோஹா அரிசி, உ.பி.யின் காலாநமக் அரிசி ஆகியவை இடம்பெற்றிருந்தன. பாரம்பரிய தானியங்களுடன் சேர்த்து, ஆரோக்கியமான சிறுதானிய ஸ்நாக்ஸ்களை கியூ டோங்யுவுக்கு பிரதமர் மோடி வழங்கினார். ஐக்கிய அரபு அமீரக அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யானுக்கு குஜராத்தின் அரிய ஜவுளி பாரம்பரியமான, ‘வாழ்வின் மரம்’ வடிவத்தை கொண்ட ரோகன் ஓவியம் வழங்கப்பட்டது. மேலும், புவிசார் குறியீடு பெற்ற கேசர் மாம்பழங்கள், மேகாலயா அன்னாசிப் பழங்கள் உள்ளிட்ட பாரம்பரிய இந்திய விளைபொருட்களும் வழங்கப்பட்டன.


















