
பெங்களூரு: மே 30-
கர்நாடக உயர் நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளாக 3 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது மாவட்ட நீதிபதிகளாக பணியாற்றி வரும் ராஜேஸ்வரி நாராயண ஹெக்டே, கெதம்பாடி கணேஷ சாந்தி, பிருங்கேஷ் மகாதேவப்பா ஆகிய மூவரையும் புதிய நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கொலிஜியம் பரிந்துரை
கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்ற கொலிஜியம் செய்திருந்த பரிந்துரையின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்தின் 224-வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் இந்த நியமனத்தை செய்துள்ளதாக மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில், ராஜேஸ்வரி நாராயண ஹெக்டே அவர்கள் பொறுப்பேற்கும் நாள் முதல் அவர் ஓய்வுபெறும் 2028 மார்ச் 17-ம் தேதி வரையிலும், கெதம்பாடி கணேஷ சாந்தி மற்றும் பிருங்கேஷ் மகாதேவப்பா ஆகிய இருவரும் இரண்டு ஆண்டு காலத்திற்கும் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இன்னும் 14 இடங்கள் காலி
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட தற்போது 45 நீதிபதிகள் பணியாற்றி வருகின்றனர். பெங்களூரு முதன்மை அமர்வு, தார்வாட் மற்றும் கலபுரகி அமர்வுகளையும் சேர்த்து மொத்தம் 62 நீதிபதி பணியிடங்களுக்கு அனுமதி உள்ளது. தற்போது 3 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்ட பிறகும், இன்னும் 14 நீதிபதி பணியிடங்கள் காலியாகவே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


















