
பெங்களூரு: மே 30-
பெங்களூரு அருகே பூதிகேரே கிராஸ் பொம்மேனஹள்ளியில் உள்ள ‘ஐசிரி ஹப்’பில் ‘காயலோரம்’ என்ற உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் ஆட்டுக்கறிக்கு (மட்டன்) பதிலாக மாட்டுக்கறி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஆவலஹள்ளி போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தி, உணவகத்தை நடத்தி வந்த ஜீஜு மற்றும் ஷிபு ஆகிய இருவரை அதிரடியாக கைது செய்தனர்.
இந்த உணவகம் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இங்கு சாப்பிட வந்த இளைஞர்கள் சிலர் மட்டன் சாப்பாடு ஆர்டர் செய்துள்ளனர். அப்போது அவர்களுக்கு பரிமாறப்பட்ட கறியில் சந்தேகம் அடைந்த இளைஞர்கள், ஹோட்டல் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உடனடியாக இதுகுறித்து ஆவலஹள்ளி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உணவகத்தில் சோதனை நடத்தியபோது, அது மாட்டுக்கறி என்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்ததுடன், அந்த உணவகத்திற்கும் சீல் வைத்தனர்.


















