Home மாவட்டங்கள் பெங்களூர் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ டிரைவர் பலி

பெங்களூரு: மே 30-
நகரத்தில் நேற்று இரவு பெய்த பலத்த மழையினால், தனியார் கிளப் ஒன்றின் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுநர் உயிரிழந்த சம்பவம் விஜயநகரில் நடந்துள்ளது.
கங்கொண்டனஹள்ளியைச் சேர்ந்த சிவபோரய்யா (46) என்பவரே உயிரிழந்தவர் ஆவார். திடீரென மழை பெய்தபோது, சிவபோரய்யா விஜயநகரில் உள்ள ஒரு கிளப்பின் காம்பவுண்ட் சுவர் அருகே தனது ஆட்டோ ரிக்‌ஷாவை நிறுத்தியிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த சிவபோரய்யா 35 வருடங்களாக அத்திகுப்பேயில் வசித்து வந்தார். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாயாரை வெள்ளிக்கிழமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். தாயையும் சகோதரியையும் மருத்துவமனையில் விட்டுவிட்டு, தாம் சாப்பிடுவதற்காக வந்தபோது இந்த விபத்து நேரிட்டுள்ளது.
மழை குறையட்டும் என்று ஆட்டோவிற்குள் அமர்ந்து காத்திருந்தபோது, தொடர் மழையினால் பலவீனமடைந்திருந்த காம்பவுண்ட் சுவர் திடீரென ஆட்டோ ரிக்‌ஷாவின் மீது இடிந்து விழுந்ததாகத் தெரிகிறது.
வாகனம் இடிபாடுகளுக்குள் சிக்கி முற்றிலும் நொறுங்கியதுடன், ஓட்டுநருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜயநகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.