Home மாவட்டங்கள் பெங்களூர் பஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை -வாலிபருக்கு செருப்படி கொடுத்த பெண்

பஸ் நிலையத்தில் பாலியல் தொல்லை -வாலிபருக்கு செருப்படி கொடுத்த பெண்

ராயச்சூர்: மே 30-
பெண்ணிடம் அநாகரிகமாக நடந்து கொள்ள முயன்ற வாலிபரை, அந்தப் பெண் செருப்பால் வெளுத்து வாங்கிய பரபரப்புச் சம்பவம் ராயச்சூர் மாவட்டம் லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் நடந்துள்ளது.
லிங்கசுகூர் பேருந்து நிலையத்தில் பெண் ஒருவர் பேருந்துக்காகக் காத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், அந்தப் பெண்ணிடம் அநாகரிகமான முறையில் வம்பு இழுத்துள்ளார். மேலும், காதில் கேட்க முடியாத அளவுக்கு ஆபாச வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது.
வாலிபரின் இந்த அநாகரிக செயலால் பொறுமையிழந்த அந்தப் பெண், ஆத்திரமடைந்து அவரது கன்னத்தில் பளார் என அறைந்தார். அதோடு நில்லாமல், தனது காலில் இருந்த செருப்பை கழற்றி அந்த வாலிபரை நடுரோட்டில் வைத்து வெளுத்து வாங்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த சக பயணிகளும் திரண்டு வந்து, அந்த வாலிபருக்கு ‘தர்ம அடி’ கொடுத்தனர். பொதுமக்களின் பிடியில் இருந்து தப்பிய அந்த வாலிபர் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.
இச்சம்பவம் குறித்து லிங்கசுகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய வாலிபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பேருந்து நிலையத்தில் பெண்ணுக்கு நடந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.