
பெங்களூரு, மே 30-
காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.கே. சிவகுமார், ஜூன் 3ம் தேதி புதன்கிழமை புதிய முதலமைச்சராக பதவி ஏறகிறார்
அன்று 4.05 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில், கவர்னர் தாவர் சந்த் கெலாட், டி.கே. சிவகுமார் மற்றும் அமைச்சரவை சகாக்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இன்று மாலை விதான சௌதாவில் நடைபெற்ற கூட்டத்தில் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.கே. சிவகுமார், ராஜ்பவனுக்குச் சென்று முதலமைச்சராகப் பதவியேற்க உரிமை கோரினார். கவர்னர் இதற்கு அனுமதி அளித்துள்ளார்.

முன்னதாக, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்திற்கு பிறகு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர் கே.சி. வேணுகோபால் செய்தியாளர்களிடம் கூறும்போது டி.கே. சிவகுமார் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் புதிய தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று கூறினார். இதில் நான் பெருமைப்படுகிறேன்,” என அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தெரிவித்தார்.
காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவிக்கு டி.கே. சிவகுமாரின் பெயரை காங்கிரஸ் கட்சியின் மேலிடம் முன்மொழிந்தது. இக்கூட்டத்தில், தற்காலிக முதலமைச்சர் சித்தராமையா சிவகுமாரின் பெயரை முன்மொழிந்தார், அதை காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி ஒருமனதாக ஏற்றுக்கொண்டது. இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதாக டாக்டர் ஜி. பரமேஸ்வரா தெரிவித்தார். புதன்கிழமை டி கே சிவகுமார் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க இருப்பதால் அவரது ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர்
அதிகாரப் பரிமாற்றத்தால் காங்கிரஸ் கட்சிக்குச் சிக்கல்கள் ஏற்படும் என்று பலர் எதிர்பார்த்தனர். ஆனால், நாங்கள் ஒரு குடும்பம் போல இருக்கிறோம். சித்தராமையாவின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று அனைவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், தனது இதயத்தில் காங்கிரஸ் கட்சி மட்டுமே உள்ளது என்றும், காங்கிரஸ் மேலிடத்தின் முடிவையே பின்பற்றுவேன் என்றும் சித்தராமையா பதிலளித்தார். தனது நடவடிக்கையின் மூலம் சித்தராமையா அதை நிரூபித்தார். காங்கிரஸ் ஒரு குடும்பம் என்பதற்கு இதுவே சான்று என அவர் விவரித்தார்.
காங்கிரஸ் சட்டமன்றக் கட்சிக் கூட்டத்தில், முதலமைச்சராக சித்தராமையா சிறந்த சேவை பாராட்டப்பட்டது. இந்தத் தீர்மானத்தை டி.கே. சிவகுமார் முன்மொழிந்தார். இது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு பெருமைக்குரிய தருணம். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் இந்த அதிகாரப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. சித்தராமையாவின் ஆதரவுடன், அவரது தலைமையில் 2028-ல் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று டி.கே. சிவகுமார் கூறினார்.

















