Home மாவட்டங்கள் பெங்களூர் பிஜேபி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளருக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது

பிஜேபி எம்.எல்.ஏ.வின் ஆதரவாளருக்கு கத்திக்குத்து: 5 பேர் கைது

பெங்களூரு: ஜூலை 1-
பெங்களூர் ஜெயநகர் தொகுதி பாஜக எம்.எல்.ஏ. சி.கே.ராமமூர்த்தியின் நெருங்கிய ஆதரவாளர் ஒருவரை மர்ம நபர்கள் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயநகர் 9-வது பிளாக்கில் உள்ள தூய்மையான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே சோமசேகர் ரெட்டி என்பவர் இந்த சுத்திகரிப்பு நிலையத்தை நடத்தி வருகிறார். கடந்த ஜூன் 24-ஆம் தேதி, இவர் அங்கு இருந்தபோது ஆட்டோவில் பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளது. வாக்குவாதம் முற்றியதில், அந்த கும்பல் சோமசேகர் ரெட்டியின் வயிறு, நெஞ்சு, முதுகு ஆகிய இடங்களில் கத்தியால் கொடூரமாக குத்திவிட்டு தப்பியோடியது.
ரத்த வெள்ளத்தில் சரிந்த அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஜெயநகர் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதிரடி விசாரணை நடத்திய போலீசார், இந்த தாக்குதலில் ஈடுபட்ட ரவி, பாலு, புலி, விஷ்ணு மற்றும் சங்கர் ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.