Home மாவட்டங்கள் பெங்களூர் பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து: 3 பேர் பலி

பெங்களூரில் அடுத்தடுத்து விபத்து: 3 பேர் பலி

பெங்களூரு, ஜூலை 1-
பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே உள்ள பனகெரே – வர்த்தூர் சாலையில் இன்று அதிகாலை பயங்கர விபத்து ஒன்று நடந்தது. அதிவேகமாக வந்த தண்ணீர் லாரி (வாட்டர் டேங்கர்) ஒன்று, அவ்வழியாகச் சென்ற ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.
இதில் ஸ்கூட்டரை ஓட்டிச் சென்றவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீஸ் விசாரணையில், விபத்தில் இறந்தவர் நேபாளத்தைச் சேர்ந்த லட்சுமி குண்வர் (வயது 48) என்பதும், அவர் ‘ப்ளிங்கிட்’ நிறுவனத்தில் டெலிவரி பாயாக வேலை பார்த்து வந்ததும் தெரிந்தது. இன்று அதிகாலை 1.30 மணி அளவில் வாடிக்கையாளருக்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்துவிட்டு திரும்பியபோது இந்த சோகம் நடந்துள்ளது. ஒயிட்பீல்டு போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பானசவாடி கல்யாண் நகர் சந்திப்பில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் மற்றொரு விபத்து நடந்தது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தமிழகத்தைச் சேர்ந்த கெல்வின் (25) என்ற இளைஞர், தனது பைக்கில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த கேண்டர் லாரி ஒன்று, கெல்வின் ஓட்டி வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே கெல்வின் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். பானசவாடி போக்குவரத்து போலீசார் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொட்டபல்லாப்பூர் ஊரகப் பகுதிக்கு உட்பட்ட ரங்கநாதபுரா டி.ஏ.பி.எம்.சி. ஜனதா பஜார் முன்பாக, வேகமாக வந்த மினி டாடா ஏஸ் வாகனம் ஒன்று, அவ்வழியாகச் சென்ற பைக் மீது நேருக்கு நேர் மோதியது.இந்த விபத்தில் பைக்கில் சென்ற ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்த புனீத் (23) என்ற வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வேலை விஷயமாக வெளியே சென்றபோது அவர் விபத்தில் சிக்கியது தெரியவந்தது. தொட்டபல்லாப்பூர் ஊரக போலீசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.