
கரூர்: ஜூலை 7-
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து, முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் பொது வெளியில் பேச தடை விதிக்கக்கோரி, தி.மு.க., தாக்கல் செய்த மனு, உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில், 2025 செப்., 27ல், தமிழக வெற்றிக் கழகம் நடத்திய பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, 41 பேர் உயிரிழந்தனர். இது குறித்து, உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கண்காணிப்பில், சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைவரும், தமிழக முதல்வருமான விஜய், அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரிடம் சி.பி.ஐ., பல முறை விசாரணை நடத்தி உள்ளது.
இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் தி.மு.க., அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்தார். அதில், ‘கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்கும் நிலையில், வழக்கின் தன்மையை மாற்றும் வகையில், தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் தொடர்ந்து அவதுாறான கருத்துகளை பேசி வருகிறார். இது, சாட்சிகளை அச்சுறுத்தும் செயல். ‘வழக்கு விசாரணையில் இருக்கும் போதே, முதல்வர் விஜய் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவதோடு, அரசின் சார்பில் நிதியுதவி மற்றும் பணி நியமன ஆணைகளை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘இந்த செயல் சி.பி.ஐ.,யின் நடுநிலையான விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுவதாகும். முதல்வர் விஜய், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோர் இந்த வழக்கு குறித்து பொதுவெளியில் பேச தடை விதிக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனுவை, அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என, உச்ச நீதிமன்ற நீதிபதி அசானுதீன் அமானுல்லா தலைமையிலான விடுமுறை கால சிறப்பு அமர்வில், தி.மு.க., முறையிட்டது. அக்கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசீபா அகமதி, ”விசாரணை வளையத்தில் இருக்கும் அமைச்சர், வழக்கின் சாட்சிகளிடம் தாக்கத்தை ஏற்படுத்த முயல்வதால், அது விசாரணையை பாதிக்கும்,” என, வாதிட்டார். இதை ஏற்ற அமர்வு, வழக்கை இன்று விசாரிப்பதாக அறிவித்தது.


















