
மதுரை: ஜூன் 21-
மதுரை பாண்டி கோயில் அருகே உள்ள அம்மா திடலில் நாளை (ஜூன் 22) இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதையொட்டி மாநாட்டு வளாகத்தில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் கோயில்களில் முருகனின் அறுபடை வீடுகளில் பூஜை செய்யப்பட்ட வேல்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. தினமும் காலை, மாலையில் 2 மணி நேரம் பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப் படுகிறது.
மதுரையில் ஒரே இடத்தில் அமைக்கப் பட்டுள்ள அறுபடை வீடுகளை தரிசிக்க தமிழகம் முழுவதும் இருந்து முருக பக்தர்கள், சக்தி வார வழிபாட்டு மன்றத்தினர், ஐயப்ப பக்தர்கள் சங்கத்தினர், சாய்பாபா பக்தர்கள், ஆன்மிகவாதிகள் என பல்வேறு பக்தி குழுக்களை சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக குவிந்து வருகின்றனர்.
முன்பகுதியில் மேடை அமைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சிறுவர், சிறுமிகள் முருகன் வேடம் அணிந்து வந்து முருகனை தரிசித்து செல்கின்றனர். தினமும் மாலை 6 மணிக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்படுகிறது. இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பக்தர்கள் கூட்டத்தையும், வாகனங்களையும் ஒழுங்குபடுத்துவதுடன் பக்தர்களுக்கு தண்ணீர், பிரசாதம் வழங்கும் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
இதுகுறித்து முருக பக்தர்கள் கூறுகையில், ‘மதுரையில் ஒரே இடத்தில் அறுபடை வீடுகள் அமைக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி தருகிறது. அறுபடை வீடுகளில் பூஜிக்கப்பட்ட வேல் முருகனின் அருகே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களுக்குள் சென்றதும் உண்மையான கோயில்களுக்குள் சென்ற உணர்வு ஏற்படுகிறது’’ என்றார். இந்து முன்னணியினர் கூறும்போது, ‘‘முருகனை காண வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் மாநாட்டு திடலில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முருக பக்தர்கள் மாநாடு நாளை பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறுகிறது.
இதற்காக அறுபடை வீடுகளின் பின்பகுதியில் 8 லட்சம் சதுர அடிபரப்பளவில் மேடை, இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர். இதில் 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஒரே நேரத்தில் கந்த சஷ்டி கவசமும், திருப்புகழ், முருகன் பாடல்கள் பாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
வாகனங்களுக்கு பாஸ் தேவையில்லை: இதற்கிடையே, மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் பாஸ் வாங்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு 52 நிபந்தனைகளின் பேரில் போலீஸார் அனுமதி வழங்கினர். இதில் வாகன பாஸ் உள்ளிட்ட 6 நிபந்தனைகளுக்கு ஆட்சேபம் தெரிவித்து இந்து முன்னணி சார்பில் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப் பட்டது.