
ராமேசுவரம்: மே 28 -உலக கடல் பசு தினம் இன்று (மே 28) கடைப்பிடிக்கப்படுவதையொட்டி, இந்திய கடல் பகுதிகளில் எஞ்சியுள்ள கடல் பசுக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரிணைப் பகுதிகளில் அரியவகை கடல்வாழ் பாலூட்டி இனமான கடல் பசுக்கள் காணப்படுகின்றன. பாலூட்டி இனத்தைச் சேர்ந்த கடல் பசு வெண் சாம்பல் நிறத்தில் இருக்கும். அதிகபட்சம் 4 மீட்டர் நீளம், ஆயிரம் கிலோ எடையுடன் காணப்படும். 70 ஆண்டுகள் வரையிலும் உயிர் வாழக்கூடியது. இதற்கு முன்னங்கால்கள் போன்று தோற்றமளிக்கும் இரண்டு துடுப்புகள் இருக்கும். நாசித் துவாரம் பிறைச் சந்திரன் வடிவத்தில் உச்சந்தலையில் அமைந்திருக்கும்.
அதிகபட்சம் 30 அடி ஆழம் வரையிலும் சென்று கடல்புற்களை மேயக்கூடிய கடல் பசுக்கள் அரை மணி நேரத்துக்கு ஒருமுறை கடலின் மேல் பரப்புக்கு வந்து மூச்செடுக்கும். கடல் பசுவின் கர்ப்பக் காலம் ஓராண்டாகும். பெரும்பாலும் ஒரே ஒரு குட்டியைதான் ஈனும். குட்டி பிறக்கும்போதே மூன்றடி நீளத்தில் இருக்கும்.
முன்னர், இந்திய கடற்பகுதியில் அதிகளவில் கடல் பசுக்கள் காணப்பட்டன. 2013-ல் இந்திய வனவிலங்கு ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, தமிழ்நாட்டின் மன்னார் வளைகுடா, அந்தமான்-நிக்கோபர் தீவு மற்றும் குஜராத்தின் கட்ச் வளைகுடா ஆகிய பகுதிகளில் 250 கடல் பசுக்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, அந்த எண்ணிக்கை குறைந்து, 200 கடல் பசுக்கள் மட்டுமே இருப்பதாக இந்திய வனவிலங்கு நிறுவனம் சமீபத்தில் அறிவித்திருந்தது.
இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஆங்கிலத்தில் டூகாங் (dugong) என்றழைக்கக்கூடிய கடல் பசுவை, தமிழில் மீனவர்கள் ஆவுளியா என்று அழைக்கின்றனர். இதன் மருத்துவக் குணமுள்ள இறைச்சிக்காகவும், கடல் பசுவின் தோலில் இருந்து விலை உயர்ந்த ஆடைகள், கொழுப்பிலிருந்து தைலங்களும் தயாரிப்பதற்காகவும் அதிகளவில் இவை வேட்டையாடப்படுகின்றன.