இளைஞர்களிடம் திருவள்ளுவரை கொண்டு சேர்க்க வேண்டும்: கவிஞர் இராகவேந்திரன்

பெங்களூரு, டிச. 27: நமது இளைஞர்களிடத்தில் தமிழ் மொழியின் தொன்மையையும், தொல்காப்பியர், திருவள்ளுவரை கொண்டு சேர்க்க வேண்டும்: கவிஞர் இராகவேந்திரன் தெரிவித்தார்.
தமிழ் புத்தக திருவிழாவில் 7 வது நாளான நேற்று காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மொழிதிறன் போட்டி பெற்றது. 20க்கும் மேற்பட்ட உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்றனர். சுத்தமான தமிழ் சொற்கள் பயன்படுத்தி திருக்குறள் ஒப்புவித்தல் உள்ளிட்ட போட்டிகளில் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
அதை தொடர்ந்து பகல் 3 மணிக்கு மொழி திறன் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஓய்வு பெற்ற தமிழாசிரியை ஜி.ராஜேஸ்வரி தலைமை வகித்தார். கன்னடர்-தமிழர் நல்லிணக்கம் மற்றும் சமூக நற்பணி அறகட்டளை தலைவர் என்.இராமசந்திரன் வாழ்த்துரை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு அருள்தந்தை ஜே.ஏ.நாதன் (எ) தமிழ்மறவன் பரிசுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.அதை தொடர்ந்து மாலை 5 மணிக்கு கலையரங்கம் நடைபெற்றது. பத்திரிக்கையாளர் இலுஷன் புத்தக நிலைய உரிமையாளர் சி.சந்திரசேகர் தலைமை வகித்தார். பெங்களூரு தன்னுரிமை மனமகிழ் மன்ற தலைவர் இரா.இராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து மாணவர்களின் சிலம்பாட்டம், நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் சிந்தனை களம் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’’ என்ற தலைப்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கார்த்தியாயினி வரவேற்றார். தமிழ்நாட்டின் காரைகுடியை சேர்ந்த சிந்தனையாளர், கவிஞர் இராகவேந்திரன் சிறப்புரை ஆற்றினார். முன்னாள் மத்திய அரசின் அதிகாரி கோ.கருணாநிதி நன்றியுரை ஆற்றினார்.
இதில் சிறப்புரை ஆற்றிய, கவிஞர் இராகவேந்திரன், தமிழ்நாட்டில் பேசுவதற்கும், கர்நாடகத்தின் பெங்களூரில் பேசுவதற்கும் எனக்கு வித்தியாசமே தெரியவில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டைவிட இங்கு தமிழ் வளர்க்கும் பணி சிறப்பாக நடைபெறுவதை காணமுடிகிறது.தமிழ்நாட்டிலும் புத்தகத்திருவிழாக்கள் நடைபெறுகின்றன. அங்கு மக்களை திரட்டுவதற்கு சிரமாக உள்ளது. இதனால் அதன் நிர்வாகிகளின் நிலைமை சொல்லமுடியாது. ஆனால் பெங்களூரில் கடந்த 3 ஆண்டுகளாக, அதுவும் 10 நாட்கள் தமிழ்ப் புத்தக திருவிழா நடத்துவது என்பது உள்ளபடியே சிறப்பு வாய்ந்தது. இது சாதாரணமானது அல்ல. அதற்காக இந்த புத்தகத்திருவிழாவின் நிர்வாகிகளையும், இங்குள்ள தமிழ் மக்களையும் பாராட்டுகிறேன்.
நாம் அடுத்த தலைமுறைக்கு தமிழை கொண்டு செல்ல மறந்துள்ளோம். தமிழ்நாட்டிலேயே தமிழை மறந்துள்ளனர் என்பது வேதனைக்குரியது. அண்மையில் தமிழ்நாட்டில் ஒருவரிடம் தபால் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்று வழிகேட்டேன். அவர் தபால் நிலையம் என்றால் என்ன‌வென்று தெரியாமல் விழித்தார். அப்போது அருகில் இருந்த ஒரு மூதாட்டி, போஸ்ட் ஆபிஸ் என்று தமிழில் கேளுங்கள் அப்போதுதான் புரியும் என்றார். எனவே தமிழ்மொழியை அழியாமல் நாம் காப்பாற்ற இது போன்ற தமிழ் புத்தகத் திருவிழாக்கள் நடைபெற வேண்டும்.
நமது இளைஞர்களிடத்தில் தமிழ் மொழியின் தொன்மையையும், தொல்காப்பியர், திருவள்ளுவரை கொண்டு சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டின் சிறந்த தலைவர்களாக இருந்து மக்களை வழிநடத்திச் சென்ற காமராசர், பெரியார், கக்கன், ஜீவா போன்றவர்களைப் பற்றி இளைஞர்களுக்கு எதுவும் தெரியவில்லை என்பது வேதனைக் குரியது. சுயநலமில்லாது பொது நலத்தோடு வாழ்ந்த அந்த தலைவர்களின் பாதைகளை நாம் பின்பற்றுவது அவசியம் என்றார்.