இஸ்ரேல் மீது அணுகுண்டு வீச மாட்டோம்ஈரானுக்கு பாகிஸ்தான் மறுப்பு

டெஹ்ரான்: ஜூன் 17-
ஈரான் மீது இஸ்ரேல் அணுகுண்டு வீசினால், இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும் என்று ஈரான் ராணுவ அதிகாரி தெரிவித்தார். அப்படி எந்த உறுதியும் அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் அரசு உடனடியாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.
‘ஈரானின் அணுசக்தி திட்டம் ஆபத்தானது. அது இஸ்ரேலுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் அச்சுறுத்தலானது’ என்று கூறி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. பதிலுக்கு ஈரானும் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஈரான் இஸ்லாமிய புரட்சி படை மூத்த அதிகாரியும், ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினருமான ஜெனரல் மோசென் ரீஸி, ஈரான் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் கூறியதாவது: எங்களுக்கு எதிராக இஸ்ரேல் அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தினால், பதிலடியாக இஸ்ரேல் மீது பாகிஸ்தான் அணுகுண்டு வீசும். ஈரானுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எங்களுக்கு உறுதி அளித்துள்ளது. ஈரானுக்கு பக்கபலமாக இருப்போம். முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்று பாகிஸ்தான் வலியுறுத்தி வருகிறது. ஈரானிடம் ரகசிய வலிமை உள்ளது. அதை இன்னும் உலகத்துக்கு வெளிப்படுத்தவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், ஈரான் ராணுவ அதிகாரியின் கருத்தை பாகிஸ்தான் உடனடியாக மறுத்துள்ளது.இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் நேற்று தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: ஈரான் அதிகாரி கூறுவதுபோல பாகிஸ்தான் எந்த ஒரு வாக்குறுதியும் அளிக்கவில்லை. தவிர, சர்வதேச அளவில் அணுசக்தி ஒப்பந்தங்களை பாகிஸ்தான் முறையாக கடைபிடித்து வருகிறது. அணு ஆயுத கட்டுப்பாடுகள் தொடர்பான சர்வதேச ஒப்பந்தங்களில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். பாகிஸ்தானின் மண்ணையும், மக்களையும் பாதுகாப்பதற்கும், எதிரிகளின் அச்சுறுத்தலில் இருந்து எங்களை காத்துக் கொள்ளவுமே அணு ஆயுதங்கள் வைத்திருக்கிறோம்.
அதேபோல, எங்கள் அண்டை நாடுகள் மீது நாங்கள் ஆதிக்கம் செலுத்த நினைப்பது இல்லை. அண்டை நாடுகள் மீது இஸ்ரேல்தான் ஆதிக்கம் செலுத்துகிறது. சமீபகாலமாக, இஸ்ரேல் அத்துமீறி செயல்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் அணு ஆயுதம் தொடர்பான எந்த கட்டுப்பாட்டையும் இஸ்ரேல் கடைபிடிக்கவில்லை. எனவே, இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருப்பதை எண்ணிப் பார்த்து, மேற்கத்திய நாடுகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.