கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கால்பந்து தரவரிசையில் இந்தியாவுக்கு சரிவு

டெல்லி, ஜூலை 11- சர்வதேச கால்பந்து தரவரிசை பட்டியலை ஃபிபா வெளியிட்டுள்ளது. இதில் இந்திய ஆடவர் கால்பந்து அணி 6 இடங்களை இழந்து 133-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான சரிவை இந்திய அணி சந்தித்துள்ளது. இதற்கு காரணம் ஜூன் மாதத்தில் நடைபெற்ற 2 ஆட்டங்களில் இந்திய அணி தோல்விகளை சந்தித்ததுதான். கடந்த ஜூன் 4-ம் தேதி தாய்லாந்து அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியில் இந்திய அணி 0-2 என்ற கணக்கில் தாய்லாந்திடம் தோல்வி கண்டிருந்தது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை தகுதி சுற்றில் 0-1 என்ற கோல் கணக்கில் தன்னை விட தரவரிசையில் மிகவும் பின்தங்கிய ஹாங்காங் அணியிடம் இந்தியா வீழ்ந்திருந்தது. இந்த தோல்விகளால் பயிற்சியாளராக இருந்த ஸ்பெயினை சேர்ந்த மனோலோ மார்க்வெஸ் பதவியில் இருந்து விலகியிருந்தார். அவரது பயிற்சியின் கீழ் இந்திய அணி கடைசியாக விளையாடிய 8 ஆட்டங்களில் 7-ல் தோல்வி கண்டிருந்தது. கிடைத்த ஒரு வெற்றியும் மாலத்தீவு அணிக்கு எதிராக பெற்றதுதான். கடைசி​யாக இந்​திய அணி ஃபிபா தரவரிசை​யில் 2016-ம் ஆண்டு 135-வது இடத்​தில் இருந்தது. இதன் பின்​னர் தற்​போது​தான் கடும் சரிவை சந்​தித்​துள்​ளது. அதி​கபட்​ச​மாக 1996-ம் ஆண்டு இந்​திய அணி தரவரிசையில 94-வது இடத்​தில் இருந்​தது. தற்​போது இந்​திய அணி 1113.22 ரேட்​டிங் புள்​ளி​களை பெற்​றுள்​ளது. ஆசிய நாடு​களில் உள்ள 46 அணி​களில் இந்​திய அணி 24-வது இடத்​தில் உள்​ளது. ஆசிய அளவில் ஜப்​பான் முதலிடத்​தில் உள்​ளது. அதேவேளையில் அந்த அணி உலக அளவில் 17-வது இடம் வகிக்​கிறது.