
பெங்களூரு: ஜூலை 3 –
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையாவை மாற்றக் கோரி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 100-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியின் மேலிடத் தலைவரிடம் புகார் அளித்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் சித்தராமையா, டி.கே.சிவகுமார் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின் சித்தராமையாவுக்கு முதல்வர் பதவியும், டி.கே. சிவகுமாருக்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப்பட்டது. அப்போது இருவருக்கும் தலா இரண்டரை ஆண்டுகள் முதல்வர் பதவி வழங்குவதாக அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது.சித்தராமையா முதல்வராகி 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், டி.கே.சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்துக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் ஹுசேன், “சித்தராமையாவின் ஆட்சியில் ஊழல், சட்டம் ஒழுங்கு மோசமாகி விட்டது. அவருக்கு முன்பு போல அதிகாரம் இல்லை. ஆட்சியை வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும்” என வெளிப்படையாக விமர்சித்தார். இதற்கு அமைச்சர் ராஜண்ணா, “இக்பால் ஹுசேன் எம்எல்ஏ கூறியது உண்மைதான். மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள்‘’என்றார்.கருத்து கேட்பு: இதையடுத்து கர்நாடக அரசியல் நிலவரம் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் கருத்து கேட்க அக்கட்சியின் மேலிடம், பொதுச்செயலாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவை பெங்களூருவுக்கு அனுப்பியது.
அவர் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது பெரும்பாலானோர் சித்தராமையாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற வேண்டும். டி.கே.சிவகுமாரை முதல்வராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ இக்பால் ஹுசேன் கூறுகையில், “100-க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள் சித்தராமையாவுக்கு எதிராக மேலிடத் தலைவரிடம் கூறியது உண்மைதான். அவரை மாற்றாவிடில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும் என நான் கூறினேன். ஓரிரு மாதங்களில் நிச்சயம் மாற்றம் வரும்” என்றார். இதனால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது.