சென்னை: ஏப்ரல் 17 – கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தென்னிந்திய செங்குந்த மகாஜன சங்கத்தை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி, ‘‘சாதியை ஊக்குவிக்கும் சங்கங்களை, சங்கங்கள் பதிவு சட்டத்தின்கீழ் பதிவு செய்ய முடியுமா?’’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குவது குறித்து தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி பரத சக்ரவர்த்தி பிறப்பித்துள்ள உத்தரவு: சங்கங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயரை நீக்கும் வகையில் சங்க சட்ட திட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வது தொடர்பாக சங்க நிர்வாகிகள் அரசை அணுக வேண்டும். சாதிகளின் பெயர்களில் சங்கங்களை பதிவு செய்ய கூடாது என அனைத்து பதிவாளர்களுக்கும் பதிவுத்துறை ஐ.ஜி. சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும். சங்கங்களின் பெயரில் உள்ள சாதிப் பெயர்களை நீக்குமாறு அரசும் அறிவுறுத்த வேண்டும். இதுபோல சாதிப் பெயர்களை நீக்கி சட்ட திட்டங்களில் திருத்தம் செய்யாத சங்கங்களை சட்டவிரோத சங்கங்களாக அறிவித்து அவற்றின் பதிவை ரத்து செய்ய வேண்டும். இந்த பணிகளை 3 மாதங்களுக்குள் தொடங்கி 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.