சிவில் இன்ஜி., படிப்புக்கு குறையும் ஆர்வம்

சென்னை: ஜூன் 11-
இன்ஜினியரிங் படிக்க ஆர்வம் அதிகரிக்கும் அதே நேரத்தில், ‘சிவில்’ பாடப்பிரிவை தேர்வு செய்வதில் மாணவர்களிடம் ஆர்வம் குறைந்து வருகிறது. இதனால் பல தனியார் கல்லுாரிகள், அந்த பாடப்பிரிவை சரண்டர் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்த கல்வியாண்டில், 433 கல்லுாரிகளில், 2.33 லட்சம் பொறியியல் படிப்பு இடங்களுக்கு சேர்க்கை நடத்த அண்ணா பல்கலை அனுமதித்தது. கலந்தாய்வில், 1.79 லட்சம் இடங்களை நிரப்ப ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், 1.20 லட்சம் இடங்கள் மட்டும் நிரப்பப்பட்டன.இதில், 29 கல்லுாரிகளில் மட்டும், 100 சதவீத இடங்கள் நிரப்பப்பட்டன. 81 கல்லுாரிகளில், 25 சதவீதம் கூட நிரம்பாமல் இருந்தன. குறிப்பாக, ‘சிவில்’ பாடப்பிரிவை தேர்வு செய்த மாணவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. அரசு கல்லுாரி கலந்தாய்வில் 702 இடங்கள் நிறைவுகடந்த ஆண்டு கலந்தாய்வில், 4,451 மாணவர்கள் மட்டும் சிவில் பாடப்பிரிவை தேர்வு செய்தனர். கணினி படிப்பில் சேர, 170க்கும் மேல், ‘கட் ஆப்’ வேண்டும் என்ற நிலையில் உள்ள கல்லுாரிகளில் கூட, சிவில் பாடப்பிரிவு கலந்தாய்வு இடங்கள் நிரம்பவில்லை.நிர்வாக ஒதுக்கீட்டில் சிவில் சேர விரும்புவோர் எண்ணிக்கை, இதைவிட அரிதாக உள்ளது. நடப்பு கல்வியாண்டில் பெரும்பாலான கல்லுாரிகளில், கணினி அறிவியல் சார்ந்த பிரிவுகளுக்கு நிர்வாக ஒதுக்கீடு நிரம்பிய நிலையில், ‘சிவில்’ கேட்பாரற்ற நிலையில் உள்ளது. இதனால், முன்னணி கல்லுாரிகள் கூட, சிவில் பாடப்பிரிவை, சரண்டர் செய்யும் முடிவுக்கு தள்ளப்பட்டுள்ளன.