சென்னையில் மிக கனமழை

சென்னை, டிச. 18: வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் நேற்று முன்தினம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது.
இது நாளைக்குள் மேலும் வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக வடகடலோர தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், இதர பகுதிகளில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.