ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க பரிசீலனை

புதுடெல்லிஜூலை 3- நடுத்தர வர்க்கத்தினர் விரைவில் பலனடையும் வகையில் ஜிஎஸ்டி விகிதங்களை மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய பட்ஜெட் அறிவிப்பில் வருமான வரிச் சலுகைகள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) குறைப்பு மூலம் மற்றொரு நிவாரணத்தை வழங்க மத்திய அரசு தயாராகி வருகிறது.
அதன்படி 12 சதவீத வரி அடுக்கை முற்றிலுமாக நீக்கு வது அல்லது தற்போது 12 சதவீத வரி விதிப்புக்கு ஆளாகும் பல பொருட்களை 5 சதவீதத்துக்கு கீழ் மறுவகைப்படுத்துவது குறித்து மத்திய அரசு தீவிரமாக பரிசீலித்து வருகிறது.இந்த மறுசீரமைப்பு நடுத்தர மக்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கு பெரிதும் பலனளிக்கும். குறிப்பாக, பற்பசை, பல் பொடி, குடைகள், தையல் இயந்திரங்கள், பிரஷர் குக்கர் கள், சமையலறை பாத்திரங்கள், அயன்பாக்ஸ், கீசர், சலவை இயந்திரங்கள், சைக்கிள்கள், ரூ.1,000 விலை கொண்ட ஆயத்த ஆடைகள், ரூ.500 முதல் ரூ.1,000 வரை விலை கொண்ட காலணிகள், எழுதுபொருட்கள், தடுப்பூசிகள், பீங்கான் ஓடுகள் மற்றும் விவசாய கருவிகள் போன்றவற்றின் விலை குறைய வாய்ப்புள்ளது என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.முன்மொழியப்பட்ட இந்த மாற்றங்கள் செயல்படுத்தப்பட்டால், மேற்கூறிய பொருட்களில் பல மலிவு விலையில் கிடைக்கும். எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் அனைவருக்கும் இணக்கமான ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறது.