
அமராவதி, ஜூன் 12- வரும், 21ல் நடக்கும் சர்வதேச யோகா தின நிகழ்வில் பங்கேற்க ஆந்திராவில் இதுவரை, 2 கோடி பேர் பெயர்களை பதிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. சர்வதேச யோகா தினம் ஜூன் 21ல் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, வரும் 21ல் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கும் யோகா நிகழ்வில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்நிலையில், யோகா குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, ‘யோகாந்திரா’ என்ற விழிப்புணர்வு பிரசாரத்தை ஆளும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மே 29ல் துவக்கியது. வரும், 21ம் தேதி மாநிலம் முழுதும், 2 கோடி பேர் பங்கேற்கும் யோகா சாதனை நிகழ்வை நடத்தவும் ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான பிரசாரம் முடிய இன்னும், 10 நாட்கள் உள்ளன. ஆனால், இப்போதே 2 கோடி பேர் பதிவு செய்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மாநிலம் முழுதும் யோகா நிகழ்ச்சியை ஜூன் 21ல் நடத்த 1.3 லட்சம் இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.