குமாமோட்டோ, நவ. 13- ஜப்பானின் குமாமோட்டோ நகரில் குமாமோட்டோ மாஸ்டர் ஜப்பான் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ட்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த் ஜோடி, தர வரிசையில் 24-வது இடத்தில் உள்ள சீன தைபேவின் ஹிஸு யின்-ஹுய், லின் யின்-ஹு ஜோடியை எதிர்த்து விளையாடியது. 36 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள ட்ரீசா – காயத்ரி ஜோடி 16-21, 16-21 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தது. மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியாவின் பி.வி.சிந்து, தாய்லாந்தின் புசானன் ஓங்பாம்ருங்பானுடன் மோதுகிறார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் லக்சயா சென், மலேசியாவுடன் லியோங் ஜூன்ஹாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறார்.