தனது குடிமகனை கொன்ற அரசே – நீதிமன்றம்

மதுரை: ஜூலை 2-மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு தொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கொலை செய்யும் எண்ணத்தில் இருப்பவர்கள்கூட இப்படி தாக்கியிருக்க மாட்டார்கள் என்று வேதனை தெரிவித்ததுடன், இந்த வழக்கை மாவட்ட நீதிபதி விசாரிக்க உத்தரவிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார், கோயிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த 9 பவுன் நகை காணாமல்போனது தொடர்பாக விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு போலீஸார் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், கோயில் மற்றும் திருப்புவனம் காவல் நிலைய சிசிடிவி கேமரா பதிவுகளைப் பத்திரப்படுத்தவும், சிபிஐடி விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்கவும் உத்தரவிடக் கோரி திருப்புவனம் அண்ணா நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் கார்த்திக்ராஜா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். மேலும், அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணைச் செயலாளர் மாரீஸ்குமார் உட்பட 5 பேர் தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியன், ஏ.டி.மரியகிளாட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.