தர்ஷன் பவித்ரா கவுடாஜாமீன் மனு மீது தீர்ப்பு

பெங்களூரு, டிச. 13: சித்ர‌துர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில் நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உள்ளிட்டோர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உயர்நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) அறிவிக்கிறது.
திங்கள்கிழமை (டிச. 9) இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை நீதிபதி எஸ்.விஸ்வஜித் ஷெட்டி அமர்வு இன்று தீர்ப்பை அறிவிக்கிறது.
அக். 14 ஆம் தேதி நகரின் 57வது சிட்டி சிவில் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றம் தர்ஷன் மற்றும் பிற மனுதாரர்களுக்கு ஜாமீன் வழங்க மறுத்து உத்தரவிட்டது. இதனால் தர்ஷன், அவரது காதலி பவித்ரா கவுடா, மேலாளர் நாகராஜ் ஆர்.நாகராஜூ, தர்ஷனின் கார் டிரைவர் எம்.லட்சுமணன், நெருங்கிய நண்பர்கள் அனுகுமார், ஜெகதீஷ், பிரதோஷ் ராவ் ஆகியோர் உயர் நீதிமன்றத்தை அணுகினர். இதனிடையே, முதுகுத் தண்டு பிரச்னைக்காக அறுவை சிகிச்சை செய்ய தர்ஷனுக்கு 6 வாரங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்றம் அக். 30 ஆம் தேதி உத்தரவிட்டது. தர்ஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிச. 11 ஆம் தேதி (புதன்கிழமை) மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வார் எனவும் தர்ஷனின் வழக்கறிஞர் டிச. 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் தெரிவித்தார். அன்றைய தினம் முதல் ஜாமீன் மனு மீதான விசாரணை அறிவிக்கப்படும் வரை இடைக்கால ஜாமீனை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்பட உள்ளது.