தேசிய பசுமை தீர்ப்பாயம் கேள்வி

சென்னை: ஜன.3- எண்ணூரில் நச்சு வாயுக் கசிவு விவகாரத்தில் அமோனியா வாயுவை எடுத்துச்செல்லும் குழாயை தொழிற்சாலை நிர்வாகம் அவ்வப்போது ஆய்வு செய்யாதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ள தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இதற்கு யார் காரணமாக இருந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூர் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் தொழிற்சாலையில் இருந்து நச்சு வாயுக்கசிவு வெளியேறியதால் அந்த பகுதியில் வசித்து வந்த பொதுமக்களுக்கு மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் போன்ற உடல்உபாதைகள் ஏற்பட்டன.
பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதையடுத்து அந்த ஆலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக தென் மண்டல தேசியபசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. அதன்படி இந்த வழக்குநீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் முன்பாக விசாரணைக்கு வந்தது.அப்போது மாசுகட்டுப்பாட்டு வாரியம் தரப்பில், ‘அமோனியா வாயுக்கசிவு ஏற்பட்ட 20 நிமிடங்களில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பகுதியில் இருந்து100 மீட்டர் சுற்றளவில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
கப்பலில்கொண்டு வரப்பட்ட அமோனியாவை தொழிற்சாலைக்கு எடுத்துச்செல்லும் குழாயில் உருவான அதிகப்படியான அழுத்தம் காரணமாகவே வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. வாயுவை குளிரூட்டும் கருவியும் முறையாக செயல்படவில்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.கோரமண்டல் தொழிற்சாலை தரப்பில், ‘ஒவ்வொரு ஆண்டும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு முன்பாக இப்படியொரு சம்பவம் நடந்தது இல்லை. இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் தேவை என கோரப்பட்டது.