தேனிலவுக்கு அழைத்துச் சென்று கணவர் கொலை: மனைவி சரண்

சோரா, ஜூன் 9- மேகாலயாவின் சோரா (சிரபுஞ்சி) அருகே தேனிலவுக்கு சென்ற இடத்தில் கொலை செய்யப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ராஜா ரகுவன்ஷியின் மனைவி உத்தரப் பிரதேசத்தில் காவல் துறையிடம் சரணடைந்தார். மே 23 அன்று மேகாலயாவின் கிழக்கு காசி ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள மவ்லக்கியத் கிராமத்தில் உள்ள ஒரு ஹோம்ஸ்டேவில் இருந்து வெளியேறிய புதுமணத் தம்பதிகளான ராஜா மற்றும் சோனம் காணாமல் போயினர். தேனிலவுக்கு வந்த இந்தத் தம்பதிகள் காணாமல் போனதால் இந்த வழக்கை தீவிரமாக விசாரிக்குமாறு மேகாலயா அரசாங்கத்துக்கு மத்தியப் பிரதேச அரசு மற்றும் மத்திய அரசு அழுத்தம் கொடுத்தது. இதனையடுத்து போலீஸார் தீவிர விசாரணையை தொடங்கிய நிலையில், மாநிலத் தலைநகரான ஷில்லாங்கிலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவில் அவர்கள் வாடகைக்கு எடுத்த இரு சக்கர வாகனம், மே 24 அன்று சாலையோர ஓட்டலில் கைவிடப்பட்ட நிலையில் கண்டறியப்பட்டது. அதன்பின்னர் இடைவிடாத மழை மற்றும் மோசமான வானிலை தேடுதல் நடவடிக்கைகளுக்கு இடையூறாக இருந்தது.
தம்பதிகள் காணாமல் போன செய்தியை கேட்ட பிறகு மேகாலயாவை அடைந்த ராஜா மற்றும் சோனமின் உறவினர்கள், அவர்களைக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையின் வேகத்தில் அதிருப்தி தெரிவித்தனர். சோனம் உயிருடன் இருப்பது போல் தேட வேண்டும் என்றும், அவரது உடலைக் கண்டுபிடிக்க முயற்சிப்பது போல் காட்டக்கூடாது என்றும் அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பின்னர் கடந்த வாரம் உள்ளூர் சுற்றுலா வழிகாட்டி ஒருவர், இந்த ஜோடி இந்தியில் பேசிக் கொண்டிருந்த மற்ற மூன்று பேருடன் மலையேறி நடந்து செல்வதைக் கண்டதாகக் கூறியபோது, ​​காவல் துறைக்கு ஒரு முக்கியமான துப்பு கிடைத்தது. இதுபற்றி பேசிய வழிகாட்டி ஆல்பர்ட் பிடே, “மூன்று பேருடன் பேசிக் கொண்டிருந்த ஆணின் பின்னால் அந்தப் பெண் பின்தொடர்ந்து சென்றார். எனக்கு இந்தி தெரியாது என்பதால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை” என்று கூறினார்.