‘நமது உலகக் கோப்பை கனவை ஆஸி. பாழாக்கியது’ – ரோஹித் சர்மா பகிர்வு

மும்பை, ஜூன் 27- ஐசிசி தொடரில் ஆஸ்திரேலிய அணி உடனான பலப்பரீட்சை குறித்து இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேசியுள்ளார். அவரது தலைமையிலான இந்திய அணி 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி, 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டி, 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் ஆஸ்திரேலியா உடன் விளையாடி உள்ளது.இதில் 2023-ல் இரண்டு இறுதிப் போட்டியிலும் இந்தியா தோல்வியை தழுவியது. அதுவும் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா தோல்வியை தழுவியது. அந்த ஆண்டு நவம்பர் 19-ம் தேதி நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற ஃபைனலில் 6 விக்கெட்டுகளில் ஆஸி. வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, நமது ஒருநாள் உலகக் கோப்பை கனவை பாழாக்கியது. அதனால் நாமும் அவர்களுக்கு சிறந்த பரிசு கொடுக்க வேண்டுமென என முடிவு செய்தோம். இது போன்ற பேச்சு டிரெஸ்ஸிங் ரூமில் நடக்கும். 2024 டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸி. உடனான ஆட்டத்தில் வெற்றி பெற்றால் அவர்கள் இந்த தொடரை விட்டு வெளியேறுவார்கள் என்பதை எங்களது மனதில் வைத்தோம். அந்த ஆட்டத்தில் நான் சிறப்பாக பேட் செய்ய வேண்டுமென நினைத்தேன். எப்படியாவது ரன் சேர்க்க வேண்டுமென முடிவு செய்தேன்.
அவர்களது எதிராக சிறப்பாக செயல்பட விரும்பினேன். அதனால் ஒவ்வொரு ஆஸ்திரேலிய பவுலரையும் அட்டாக் செய்து விளையாடவே பார்த்தேன்” என தற்போது ரோஹித் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த தொடரில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 41 பந்துகளில் 92 ரன்கள் சேர்த்தால் ரோஹித். 8 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளை அவர் விளாசி இருந்தார். அந்த ஆட்டத்தில் அவரது ஸ்ட்ரைக் ரேட் 224.39. இந்திய 24 ரன்களில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதே போல இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பட்டம் வென்றது. இதில் அரையிறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளில் ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்தி இருந்தது.