
புதுடெல்லி: ஜூலை 8-
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட 17 கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நாடு முழுவதும் நாளை பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதனால் நாளை தமிழ்நாட்டில் பேருந்துகள் ஆட்டோக்கள் இயங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் வேலைநிறுத்த போராட்டத்திற்கு தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யு., உள்ளிட்ட 13 தொழிற்சங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தொழிற்சங்கம் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதால்
சென்னை உட்பட தமிழகம் முழுவதும் உள்ள பெரும்பாலான பேருந்துகள் நாளை இயக்கப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் அதிகளவில் அங்கம் வகிப்பதால் பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடாது என தெரிகிறது. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்திற்கு இதுவரை ஆதரவு தெரிவிக்காததால், கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்படும். நாடு தழுவிய இந்த போராட்டத்தில் வங்கித் துறையும், காப்பீட்டு துறையும் இணைவதாக அறிவித்துள்ளது.